Monday, September 28, 2009

slice of life @ udumalpet - 2

நாய்க்கு வேலை இல்லை. நிற்க நேரமில்லைங்கிற பழமொழி மாதிரி பெருசா ஒண்ணும் பிரயோசனம் இல்லையென்றாலும் கொஞ்சம் நாளா வேலை அதிகம். ஜல்லிபட்டியில் கிடாவெட்டு, பாலப்பம்பட்டியில் ரேகளா ரேஸ், ஆண்டிப்பட்டியில் காட்டுயானைகள் வந்து சென்ற நண்பனின் தோட்டம் , கொழுமம்- ருத்திரபாளையத்தில் கோயில் திருவிழாங்கிற மாதிரியான வேலைகள் நிறைய வந்துவிடுகிறது....

-------------------------------------------------------------------------------------------
சில நாட்களுக்கு முன் மாலை நேரத்தில் அனுசம் தியேட்டரைத் தாண்டி அண்ணா சிலை அருகே வரும்போது ஒரு இருபது இரு சக்கர வாகனங்கள் அங்கே இருந்தன. மக்கள் கூட்டமாக நின்று வானத்தை பார்ததுக் கொண்டும் கைக்கடிகாரங்ளையும் மாறி மாறி பார்த்துக் கொண்டுயிருந்தனர். என்னாச்சு என்று அறிய சில நிமிடங்கள் பிடித்தது. ஒன்றுமில்லை. நம்ம ஊரில் சிக்னல் அன்றுதான் செயல்பட ஆரம்பித்து. அது எத்தனை நிமிடங்களுக்கு ஒரு தடவை பச்சை விழுகிறது என்பதையும் ஆராய்ந்து கொண்டுயிருந்தனர் நம் மக்கள். (பட்டிக்காட்டான் மிட்டாய் கடையை பார்ததமாதிரிங்கற பழமொழி ஞாபகம் வருதா உங்களுக்கு??)
ஆனால் ஒரு விதத்தில் நம்ம் ஊர்காரங்களை நினைத்து பெருமைகொள்ள வேண்டும். நம்ம போலீஸ் காலைல வந்து சிக்னல் ஆன் பண்ணி போனாங்கனா திரும்பவும் சாயந்திரம் தான் வர்றாங்க. ஆனாலும் நம்ம ஆளுக சிக்னலை மதித்து ஒழுங்க போறாங்க...சில லாரி காரங்களையும் சில பேருந்துகாரங்களையும் தவிர ('எப்படியும் வீதிக்கு ரெண்டு ஜாதிக்கு ரெண்டு விளங்காதவனுக இருப்பாங்க' என்ற பழமொழியைப் போல)

-------------------------------------------------------------------------------------------

மடத்துக்குளம் தாண்டி இருக்கும் புஷ்பத்தூர் (ஜெயம் படத்தில் ரவியின் ஊராக வரும் அதே புஷ்பத்தூர்தான்) அருகில் உள்ள ஒரு மில்லை கோல்ட் வின்னர் கம்பெனி விலைக்கு வாங்கி 50 கோடி ரூபாய் செலவில் புதுப்பித்து வருகின்றனர். ஏற்கனவே சுகுணா சிக்கனின் பதப்படுத்தும் தொழிற்சாலை மடத்துக்குளம் தாண்டி வயலூர் அருகில் அமைந்திருக்கும் நிலையில் நம்ம ஏரியாவில் கொஞ்சம் பிரபலமாக இருக்கும் VKS பாம்ஸ் நிறுவணமும் கோழி பதப்படுத்தும் தொழிற்சாலையை மடத்துக்குளம் அருகில் கட்டி வருகின்றனர். அதே போல சாந்தி சிக்கன் நிறுவணமும் அதே ஏரியாவில் தொழிற்சாலை அமைத்து வருகின்றனர். ஆக முட்டை கோழிக்கு நாமக்கல் பிரபலமாக இருப்பதைப் போன்று வருங்காலத்தில் பிராய்லர் கோழிக்கு உடுமலைப்பேட்டை பிரபலமாக மாறலாம் (நீங்கள் சென்னையில் இருந்தால் ஏதற்கும் நீங்கள் கோழி வாங்கும் போது அது எங்கிருந்து வருகிறது என்று கேட்டுப் பாருங்கள். நம்மூராக இருக்கலாம்)

-------------------------------------------------------------------------------------------

வருசா வருசம் தீபாவளி பொங்கல்னு தவறாம வரும் பண்டிகையைப் போல தவறாமல் யாராவது திருமூர்த்தி மலையில் விழுந்து உயிர் தயாகம் பண்ணிட்டேயிருக்காங்க. இப்போது மலையில் ஒரளவு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துள்ளதால் சமீப காலமாக ஏதும் உயிர் இழப்பு இல்லை. ஆனால் சில நாட்களுக்கு முன் பெதப்பம்பட்டியில் உள்ள பாலிடெக்னிக்கில்(புதுசா ஆரம்பித்தது) சில மாணவர்கள் திருமூர்த்தி அணையில் குளிப்பதற்கு கட் அடித்துவிட்டு வந்தார்கள். அணைப்பகுதியில் குளித்த இரண்டு மாணவர்கள் சேற்றில் சிக்கி இறந்தார்கள். கலெக்டர் நேரில் வந்து பார்தது Boat house பகுதிக்கு முள்வேலி போட சொல்லிவிட்டார். படகு சவாரி செய்பவர்கள் மட்டும் சீட்டு வாங்கினால் தான் வேலியை தாண்டி செல்ல முடியும். இனி வருடம் முழுவதும் அணைக்கு செல்ல முடியாது. கிட்டதட்ட ஒரு ஆறுமாதம் அருவியில் அதிகமா தண்ணீர் வரும் என்பதால் அங்கேயும் செல்ல முடியாது...கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கிறது. ஆனால் பல உயி்ர்களை காப்பாற்றும் என்பதால் மகிழ்ச்சியே...(ஓவர் சென்டிமென்டா இருக்கா...)

-------------------------------------------------------------------------------------------

ஒரு மத்தியான நேரத்தில பஸ் ஸ்டாண்ட் காந்திராம்ஸ் மாடில டிபன் சாப்பிட்டு இருக்கும் போது அதே டேபிள்ல சாப்ட்வேர் ஆள் மாதிரி ஒருத்தர் லோக்கல் ஆள் ஒருத்தரும் சாப்பிட்டு கொண்டிருந்தார்கள். எனக்கு நம்ம வாடிக்கையாளர் ஒருவர் கூப்பிட்டபோது நான் 'உடுமலை.காம்மிலிருந்து சிதம்பரம் பேசுகிறேன்' என்று பேசியதை பார்த்து நான் பேசியதும் உடுமலை.காம்மை பற்றி கேட்டார். நமக்கு செலவில்லா விளம்பரம் அல்வா சாப்பிடற மாதிரி.அதனால உடுமலை.காம்மைப் பற்றி நல்ல விளம்பரம் ஒன்று கொடுத்தேன். பின்பு அவரைப் பற்றியும் கூறினார். தான் அமெரிக்காவில் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்வதாகவும் ஒரு மாதம் விடுமுறையில் வந்திருப்பதாகவும் கூறினார். நிறைய கேள்வி கேட்டார்.நிறைய பேசினார். பின்பு ஒரு தோட்டம் வாங்லாம் என்றிருப்பதாகவும் கூறி நீங்களும் தோட்டம் வைத்திருப்பதால் பராமரிப்பு பற்றி கேட்டார். நான் ஓப்பனாக "உங்கள் வீட்டில் யாராவது பார்ப்பதற்கு இருந்தால் மட்டுமே தோட்டம் சரி இல்லையென்றால் நிச்சயம் ஒத்துவராது. அதுவும் உரிமையாளர் அமெரிக்காவில் இருக்கிறார் என்றால் கேட்கவே வேண்டாம். பக்கத்து தோட்டக்காரர் முதல் நிறைய துன்பங்கள் வரும். அதெல்லாம் இங்கேயிருந்து பார்க்க வேண்டிய சொத்து. இப்போதைக்கு வேண்டுமானால் சிறிய பட்ஜெட்டில் வீடுகள் வாங்கிப் போடுங்கள். நீங்கள் இந்தியாவுக்கு வந்தபின்பு அதை நல்ல விலைக்கு விற்று பின்பு தோட்டம் வாங்கலாம்" என்று கூறி விட்டு அடுத்த விசயத்துக்கு தாவினேன். சிறிது நேரத்தில் விடைப்பெற்றேன்.
அடுத்த நாள் மதியம் சாப்ட்வேர்காரருடன் சாப்பிட்டு கொண்டுயிருந்தவர்(புரேக்கர்) நமது கடையில் பெயரை மட்டும் வைத்துக் கொண்டு எப்படியே தேடி கண்டுப்பிடுத்து "என்ன தம்பி இப்படி என் வியாபாரததை கெடுத்தீட்டிங்க. வரும் திங்கட்கிழமை கிரயம் வைச்சுக்கலாம்னு சொன்னவர் இப்ப தோட்டம் வேண்டாம் வீடு பார்க்கலாம்ங்கிறார். XX லட்சம் ரூபாய் வியாபாரத்தைக் கெடுத்தீட்டிங்ளே...நல்லா இருங்க தம்பி என்று சாபம் விடும் ஸடைலில் சொல்லிவிட்டு பதிலை எதிர்பார்க்காமல் கிளம்பிவிட்டார். வருத்தத்துடன் இனிமேல் அடுத்தவர் விசயத்தில் மூக்கை நுழைக்ககூடாது என்றும் நமக்கு சம்பந்தம் இல்லாதவைகளைப் பற்றி கருத்து சொல்லக்கூடாது என்று 12வது முறையாக முடிவெடுத்துள்ளேன். பார்க்கலாம் :)

*****************************************************************************
ரயில்வே பாலம் வேலைகள் ஓரளவு வேகத்தில் நடக்கிறது. மீட்டர் கேஜ் பாதைகள் அகற்றப்பட்டு வருகின்றன.

******************************************************************************
பள்ளபாளையம் ஆனந்த விநாயகர் கோயில் மற்றும் சுடலையாண்டர் கோயில் ஆகியவற்றில் ஓரே இரவில் கொள்ளையர்கள் உண்டியலை உடைத்து திருடினார்கள்
*******************************************************************************
பாராளுமன்ற தேர்தலில் பொள்ளாச்சியில் வெற்றி பெற்றதை தொடர்ந்து மேலும் உடுமலைப்பேட்டை தொகுதி இரண்டாக பிரிவதைத் தொடர்ந்து இந்த தடவையும் வெற்றி பெற வேண்டும் என்ற தீவிரத்துடன் அதிமுகாவினர் இப்போதே தேர்தல் பிரசாரத்தை தொடங்கி விட்டனர்.
*******************************************************************************
திருப்பூரில் தொழிலாளர்கள் பற்றாக்குறை தலைவிரித்து ஆடுகிறது. நம்ம ஊருக்கே கிட்டதட்ட பத்து பஸ்கள் வருகின்றன ஆட்களை கூட்டி செல்வதுக்கு. அது கொழுமம் வரை செல்கிறது. கொழுமம் எங்கிருக்கிறது திருப்பூர் எங்கிருக்கிறது????
*******************************************************************************
பழனி பொள்ளாச்சியைக்காட்டிலும் நம்ம ஊரில் மழைக் குறைவு. நல்ல காலம் இரண்டு அணைகளிலும் ஓரளவு தண்ணீர் இருக்கிறது. கிணற்று நீரை மட்டுமே நம்பி இருப்பவர்களின் விவசாயம் இன்னும் இரண்டு மாதம் தாக்கு பிடிப்பதே கஷ்டம்தான்
*******************************************************************************
நம்ம ஊரில் வட்டார போக்குவரத்து அலுவலகம் இது வரை பொள்ளாச்சியுடன் இருந்தது அதனால் பதிவு எண் TN 41 என்று ஆரம்பிக்கும். இப்போது அது திருப்பூருட்ன் இணைத்துவிட்டார்கள். அதனால் இப்போது நம்ம ஊர் பதிவு எண்TN 42 இல் ஆரம்பிக்கிறது
******************************************************************************
மின்மயான வேலைகள் கிட்டதட்ட முடிந்துவிட்டது. இன்னும் இரண்டு மாதங்களில் துவக்கப்படலாம்
******************************************************************************
இன்னும் இருக்கிறது...சில நாட்களில் அடுத்த பதிவு