Monday, October 19, 2009

உடுமலைப்பேட்டை

நாணயம் விகடனின் வந்த கட்டுரை (நன்றி நாணயம் விகடன்)

''எங்க ஊரை 'ஏழைகளின் ஊட்டி'னு சொல்லுவாங்க... ஆளையே உசர தூக்கிட்டுப் போறமாதிரி காத்து, ஊரைச் சுத்தி மலைக, சில்லுனு எப்பவும் மோடம் போட்ட மாதிரி இருக்கற க்ளைமேட் இதுகதானுங்க அப்படிச் சொல்றதுக்குக் காரணம். இன்னிக்கு கம்ப்யூட்டர்ல கணக்குப் போட்டு பங்கு மார்க்கெட்ல பணத்தை இறக்குறாங்க. ஆனா 'ஆன்லைன்' இல்லாத காலத்துலயே போன்ல பேசியே பிஸினஸை டெவலப் செஞ்ச ஊருங்க எங்க ஊரு''னு உடுமலைப்பேட்டையிலருந்து வர்றவங்க சொல்லி அடிக்கடி கேட்டிருக்கேன்...'' அதெல்லாம் உதாறா, உண்மையானு தெரிஞ்சிக்கிடலாம்னு அங்கே விட்டேன் சவாரி...

உடுமலையைச் சுத்தியிருக்கற 64 கிராம மக்களை நம்பித்தான் இந்த ஊர் தொழில்கள் இருக்கு. அந்த 64 கிராம மக்களுக்கும் முக்கிய வருமானம் விவசாயம்தான்! குறிப்பா உடுமலை பகுதியில தென்னையும், வாழையும் அதிகம். முக்கியமான தொழில்னு பாத்தா... பிராய்லர் கோழி வளர்ப்பு, நூல் மில், கொப்பரை இவைகதானு டிபன் சாப்பிட்ட இடத்துலயே விசாரிச்சுத் தெரிஞ்சுக்கிட்டேன்.

சரி, நூல் மில்ல இருந்து ஆரம்பிக்கலாமுன்னு முடிவு பண்ணி, மில் யூனிட் வச்சிருக்கற காளிதாஸைப் போய்ப் பாத்தேன். என்னைப் பாத்ததுல அவருக்கு அம்புட்டு சந்தோசம். இந்த தொழிலைப் பத்திக் கேட்டதும் சும்மா திருமூர்த்தி அருவி கணக்கா கொட்ட ஆரம்பிச்சுட்டாரு.


''இங்க பெரிய ஸ்பின்னிங் மில்லுக இருந்தாலும், 'ஒப்பன் எண்ட் யூனிட்'னு சொல்ற எங்கள மாதிரி சின்ன யூனிட்டுகதானுங்க அதிகம். பெரிய மில்கள்ல வேஸ்டாகுற கழிவுப் பஞ்சுகளை வாங்கி அதுல நூலை தயாரிக்குறதுதான் எங்க தொழில். இப்படி கழிவுப் பஞ்சுல தயாராகுற நூலை வச்சுத்தான் போர்வை, பெட்ஷீட், காடா துணிகளைத் தயாரிக்குறாங்க. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்கள்ல மட்டும் 'ஓப்பன் எண்ட் யூனிட்'க 300-க்கும் மேல இருக்கு. அதுல அதிகமா இருக்கறது வெள்ளக்கோவிலிலயும், உடுமலையிலயுந்தான்.

இந்தத் தொழிலை நம்பி நேரடியாவும், மறைமுகமாவும் ரெண்டு லட்சம் குடும்பங்க பொழைச்சுக்கிட்டிருக்கு. நல்லா நடந்துக்கிட்டிருந்த இந்தத் தொழிலு, இப்ப கொஞ்ச நாளா தேக்கமா இருக்கு. பஞ்சு விலை கூடிப்போச்சு. இதைத் தாக்குப் பிடிக்க முடியாம பல யூனிட்களை மூடிட்டாங்க. அதனால அரசு உடனடியா எங்க தொழிலுக்குவாட், செஸ் வரியை ரத்து செய்யறதோட, கழிவுப் பஞ்சை ஏற்றுமதி செய்யறதையும் தடை செய்யணும்'' என்று கோரிக்கை வைத்தார்.

காளிதாஸூக்கு ஒரு வணக்கத்தைப் போட்டுட்டு நடையைக் கட்டுனேன். வழியில இருந்த ஒரு கொப்பரை களத்தைப் பாத்ததும் உள்ளே நுழைஞ்சிட்டேன். அங்க ஒரு பக்கம் தேங்காயை உரிக்குறதும், காய வக்கிறதுமா பிஸியா இருந்தாங்க. கொப்பரை களத்தோட பொறுப்பாளர் சீனிவாசன்கிட்ட பேசினேன்.

''இங்க தென்னை மரங்க ஜாஸ்தி. சில பேரு காயா விப்பாங்க. சிலரு கொப்பரையாக்கி விப்பாங்க. அப்படி கொப்பரையா விக்க நினைக்குற விவசாயிங்க எங்கள மாதிரி களம் வச்சிருக்கவங்ககிட்ட சொல்லிடுவாங்க. நாங்களே ஆளுகள வச்சி கொப்பரையாக்கி கொடுத் திடுவோம். அதை விவசாயிக விரும்புன இடத்துல வித்துக்குவாங்க. ஒரு சிலரு எங்களையே வித்து தரச் சொல்லுவாங்க. அவங்களுக்கு நாங்க வித்துக் கொடுத்துடுவோம். இதுல ஒளிவு, மறைவுக்கு வேலையே இல்லை. ஈரோடு மார்க்கெட் விலை எஸ்.எம்.எஸ்-ல வந்துடும். அந்த விலைக்கு உள்ளூர் வியாபாரிககிட்ட வித்துக் கொடுப்போம். எங்களுக்கு தேங்காயை ஒடைச்சு பருப்பெடுக்குறப்ப கிடைக்குற தொட்டிதான் (கொட்டாங்குச்சி) லாபம்.

இந்தத் தொட்டிக கார்பன் தயாரிக்குறதுக்குப் பயன்படுது. நாங்க தொட்டிகளை காங்கேயத்துக்கு அனுப்பிடுவோம். அங்கதான் இதை கார்பனா மாத்துற யூனிட்க இருக்கு. சில நேரத்துல கலைப்பொருட்களைச் செய்யறவங்களும் வந்து தொட்டிகளை வாங்கிட்டுப் போவாங்க. இன்னிக்கு நிலமைக்கு தொட்டி ஒரு டன் 3,300 ரூபாய்க்கு விக்குது. உடுமலையில எங்களை மாதிரி 40-க்கும் அதிகமான களங்க இருக்கு. ஐம்பது நாள் கழிச்சு எல்லாரும் சேர்த்து மொத்தம் 500 டன்னுக்கு மேல தொட்டிகளை அனுப்புறோம்'' என்றார்.

அடுத்ததா பிராய்லர் வளர்ப்பு பற்றி தெரிஞ்சுக்கு றதுக்காக 'வெங்கடேஸ்வரா ஹேட்சர் ஸ்கம்பெனி'க்காக முட்டைகளைத் தயாரிச்சுக் கொடுத்துக் கிட்டிருக்கற மகாலிங்கத்தைப் போய்ப் பாத்தேன்.

''இங்க பத்து விவசாயிக்கு ஒரு விவசாயி பிராய்லர் வளக்குற பண்ணை வச்சிருப்பாங்க. இதுக்கு ஆள் அதிகம் தேவைப்படாது. விவசாயத்தோட ஒட்டுன தொழில். கோழிகளோட எச்சத்தை நிலத்துக்கு உரமா போட்டுக்கலாம். அதனாலதான் விவசாயிக அதிகமா ஒப்பந்த முறையில பிராய்லர் வளர்க்குறதுல ஆர்வம் காட்டுறாங்க. கம்பெனிக் காரங்க குஞ்சுகளைக் கொடுத்துட்டு, 60 நாளைக்கு ஒரு தடவை எடுத்துக்குவாங்க. தீவனத்திலிருந்து எல்லாத்தையும் அவங்களே கொடுத்துட்டு, கிலோவுக்கு 3 ரூபா கொடுக்குறதால விவசாயிகளும் ஆர்வமா செய்யறாங்க.

நான் முட்டை உற்பத்தி செஞ்சு கொடுக்குறேன். இதுக்கு இன்வெஸ்ட்மென்ட் அதிகமாகும். அதோட கவனிப்பும் அதிகம் தேவைப்படுறதால ஒரு சிலர் மட்டுந்தான் முட்டை உற்பத்தி செய்யற பண்ணை வச்சிருக்காங்க. பிராய்லர் கோழி பண்ணைக மூலம் மட்டும் உடுமலையில வருசத்துக்கு சுமார் 50 கோடிக்கு மேல டேர்ன் ஓவர் ஆகுது. இப்ப இடையில கொஞ்ச நாளா பிராய்லர் ஃபீல்டு கொஞ்சம் டல்லா இருந்துச்சு. இப்ப மறுபடியும் நல்லாயிருக்கு'' என்றார்.

அடுத்ததா உடுமலை வியாபாரிகள் சங்கத் தலைவர் பால நாகமணியைப் பாத்து ஊரோட வியாபாரத்தைப் பத்திக் கேட்டேன்...

''வியாபாரம் முன்ன விட குறைஞ்சு போச்சு. இப்ப நகைக்கடையிலயும், துணிக்கடையிலயும்தான் ஓரளவுக்கு வியாபாரம் நல்லா இருக்கு. நாங்க மூணு தலைமுறையா பலசரக்கு கடை வச்சிருக்கோம். எங்க தாத்தா காலத்துல 12 தராசு எப்பவும் பிஸியாவே இருக்கும். இப்ப ரெண்டு தராசுக்கே வேலையைக் காணோம். விலைவாசி கூடுனதால, வழக்கமா வாங்குற அளவை விட குறைச்சலாத்தான் வாங்குறாங்க. மக்களும் சிக்கனமா செலவழிக்க ஆரம்பிச்சுட்டாங்க'' என்றார்.

இந்த ஊர் மக்கள் எப்படி சேமிக்குறாங்கனு 'ஷேர்கான்' நிறுவனத் தோட ஃப்ரான்ச்சைஸ் பொறுப்பாளர் சம்பத்கிட்ட கேட்டேன்.

''மக்கள்கிட்ட ஷேரைப் பத்துன விழிப்புணர்வு அதிகமாவே இருக்கு. ஆன்லைன் இல்லாத காலத்துல ஆஃப்லைன்லயே அதிக வியாபாரம் பண்ணது உடுமலைதான். ஷேர்ல மட்டுமில்லாம ரியல் எஸ்டேட், தங்கம், வங்கினு நாலு வகையிலயும் சமமா முதலீடு பண்றாங்க. இங்க மொத்தம் எட்டு புரோக்கிங் ஆபீஸ் இருக்கு. எல்லா ஆபீஸிலயும் சேத்து ஒரு நாளைக்கு 10 கோடி ரூபாய்க்கு பிஸினஸ் நடக்குது'' என்றார்.

ல் எஸ்டேட் தொழிலும் இந்த ஊர்ல சக்கை போடு போட்டுக்கிட் டிருக்கு. இந்தப் பகுதியில வீசுற காத்துலயிருந்து மின்சாரம் தயாரிக் குறதுக்காக ஏகப்பட்ட விண்ட் மில்கள் வந்துக்கிட்டிருக்கு. நிலங்களோட விலை கூடுறதுக்கு அதுவும் ஒரு காரணம். ஊருக்கு தெக்க இருக்க திருமூர்த்தி மலைக்குப் போற சாலையும், கிழக்கே பழநி ரோடும் நல்லா டெவலப் ஆகிட்டு இருக்கு. 'பைபாஸ் ரோடு வந்தா... ஊரோடு வளர்ச்சி இன்னும் நல்லாயிருக்குமுன்'னு சொல்றாங்க.

கடைசியா, மனவளக் கலை மன்றம் வச்சிருக்கற பொன்னுசாமிகிட்ட ஊர் நிலவரத்தைக் கேட்டேன்.

''இந்த ஊரைச் சுத்தியும் சுற்றுலாதலங்கள் இருக்கு. திருமூர்த்தி அணை, அமராவதி அணை, ஆழியாறு, பழநினு எல்லாமே முப்பது கிலோமீட்டர் சுற்றளவுக்குள்ளயே இருக்கு. அதைவிட இந்த ஊர்ல கல்வி ஸ்தாபனங்கள் தரமா இருக்கு. பல ஊர்களிலிருந்தும் தங்களோட பிள்ளைகளை இந்த ஊருலயிருக்கற பள்ளியில சேத்துப் படிக்க வைக்குறாங்க. புகழ் பெற்ற சைனிக் ஸ்கூலும் இங்கதான் இருக்கு. இந்த ஊர்ல ஏகப்பட்ட வேலைக இருக்கு. அதைச் செய்யறதுக்குத்தான் ஆளைக் காணோம். தினமும் இங்கிருந்து எட்டு பஸ்ல திருப்பூருக்கு வேலைக்கு ஆளுகளை ஏத்திக்கிட்டுப் போறாங்க. அதுனால உள்ளூர்ல எந்தத் தொழிலுக்கும் ஆளுக கிடைக்கிறதில்லை. திருமுர்த்தி அணை, அமராவதி அணைகளைச் சுற்றுலாதலமா அறிவிச்சு, ஊருக்கு ஒரு பைபாஸ் போட்டுட்டா... இன்னும் பல மடங்கு முன்னேறிடும் எங்க ஊரு'' என்றார்.

இந்த ஊரைப் பொறுத்தவரைக்கும் மக்கள் நல்ல உழைப்பாளிகளாகவும், சம்பாதிக்கத் தெரிந்தவர்களாகவும் இருக்கிறார்கள். அதே நேரம் சமீபகாலமாகச் சம்பாதிக்கும் பணத்தைச் சேமிப்பதை விட, அனுபவிப்பதில்தான் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். இந்த ஊர்களில் அதிகரித்து வரும் கார்களின் எண்ணிக்கையே இதை உறுதி செய்கிறது.

Wednesday, October 7, 2009

slice of life @ udumalpet - 3

நம்ம ஊர்க்காரங்களுக்கு 'கவுரவம்' ரொம்ப முக்கியம். என் கூடப் படிச்ச நண்பன் நித்தியனந்தன் தும்பலப்பட்டிகாரன். அவங்க பங்காளி (பெரியப்பா மகன்) நோம்பிக்கு கோயமுத்தூர்ல போய் துணி எடுத்துட்டு வந்து அவுங்க வீட்ல வந்து காட்டிட்டு போகும்போது 'ஏன் நித்தி நீ நம்ம ஊருல வேலவன்ல தானே துணி எடுப்பே' னு சொல்லிட்டு போய்ட்டான். இவனுக்கு வந்தே கோபம். அவன் என்ன அப்படி கேட்டுட்டு போய்ட்டான். நான் பாரு எங்க போய் துணி எடுக்கிறேன்னு என்னைய கூப்பிட்டான். என்னைய கூப்பிடும்போதா டிவில போத்தீஸ் விளம்பரம் போடனும்?. நாம நாளைக்கி மெட்ராசுக்கு போய் போத்தீஸ்ல துணி எடுத்தே ஆகனும்னு சொன்னான். பையன் டென்சனா இருக்கான்னு சொல்லிட்டு தாராளமாக போகலாம். இப்ப மதுரைலையும் போத்தீஸ் இருக்கு அங்க போலாம். அப்பறம் நேர்ல பேசலாம் சாயத்திரம் டவுனுக்கு வானு சொல்லிட்டு கட் பண்ணிட்டேன். சாயந்திரம் சந்தைக்கு போய் தக்காளி காசை வாங்கிட்டு ஓட்டை டீவிஸ்சை உருட்டிட்டு நம்ம கடைக்கு வந்தான். நான் கடையில் செல்வா கூட் பேசிட்டு இருந்தேன். பின்பு நானும் செல்வாவும் என்ன நடந்தது என்று கேட்டறிந்தோம். சரி துணிமணி எவ்வளவு எடுக்கனும்னு கேட்கேடன். ஒரு சட்டை ஒரு பேண்ட். சுமார் ஆயிரம் ருபாய் துணிக்காக ரெண்டாயிரம் செலவு பண்ணி (நாலு பேர் ஒரு நாள் காரில் போனால் ஆகும் செலவு) போகனுமா என்று கேட்டேன். லட்சம் ரூபாய் ஆனாலும் பரவாயில்லை நாம வெளியூர் போய்தான் எடுக்கனும். டேய் இது என் மானப் பிரச்சனை அதனால நீ வந்தே ஆகனும்னு சொன்னான். இடையே செல்வா வேறு ஒரு பிட்டைப் போட்டான். மதுரை கூட பக்கமா இருக்கு. கம்முனு திருநெல்வேலில இருக்கற RMKVக்கு போகலாம். ரொம்ப தூரமா போய் எடுத்த மாதிரியும் இருக்கும். நல்ல qualitya இருக்கும்னு சொல்லிட்டான். உடனே போத்தீலிருந்து ஆஎம்கேவிக்கு மாறிட்டான். அவனுடைய மானப்பிரச்சனைக்காக இந்த வாரம் ஞாயிற்றுகிழமை 5 பேர் 3000 செலவு பண்ணி ஆயிரம் ரூபாய்க்கு துணி எடுக்க காரில் திருநெல்வேலி போறோம். நீங்க வர்றீங்களா?


கொஞ்ச நாளுக்கு முன்னாடி கல்லூரியை விட்டு வந்த பசங்க ஒரு இருபது பேரிடம் இப்போது பிரபலமாக இருப்பது 'ஒளிஞ்சு விளையாட்டு'. நாம் சின்ன வயதில் விளையாடிய அதே விளையாட்டு தான். ஆனால் இப்போது நாடு கொஞ்சம் முன்னேறியிருப்பதால் அதே விளையாட்டு பைக்கில் விளையாடுகிறார்கள். ஆமாம் பைக்கில் தான். ஆவுட் ஆனவன் கால் மணி நேரத்துக்கு முன்னாடி கிளம்பி போவான். பின்னர் ஆறு அல்லது ஏழு வண்டிகளில் அந்த வண்டியைத் தேடி கிளம்புவார்கள். அவனை கண்டுபிடிக்கனும் இதுதான் விளையாட்டு. விதிகள். ஆறு வண்டிகளும் பல ஏரியாகளில் சுற்றும். ஆறு பேரும் conference இருப்பார்கள். கிட்டதட்ட 3 மணி நேரம் வண்டி நிக்காமல் சுற்ற வேண்டும். கிட்டதட்ட 3 மணி நேர விளையாட்டுக்கு பெட்ரோல் மற்றும் போன் பில் மட்டும் 3000 ரூபாய் ஆகிறதாம். ஆனால் ரொம்ப interesting ஆக இருக்கிறதாம். ஒரு நாள் நானும் கலந்துகிட்டு நம்ம காசையும் புகையாக்கனும்....

இது கிசுகிசு
நகரின் மிகப்பெரிய தொழில்அதிபர். அவரின் மனைவி நிர்வகிக்கும் பஞ்சு மில்லில் ஒரு ஆந்திரா வியாபாரியிடம் சுமார் 4 லட்சத்துக்கு பஞ்சு வாங்கியிருக்கிறார்கள். பஞ்சு வந்ததும் ஒரு பண்டலைப் பிரித்து பார்த்து நல்லாயிருக்கிறது என்று எண்ணி செக் போட்டு அவனுக்கு அனுப்பிவிட்டார்கள். சில நாட்கள் கழித்து மொத்ததையும் பிரித்துப் பார்த்தால் அத்தனையும் வேஸ்ட். மட்டரகம். உடனே பேக் பண்ணி அவனுக்கே திருப்பி அனுப்பி விட்டு செக்குக்கு stop payment கொடுத்து விட்டு அதை மறந்தே விட்டார்கள். அந்த ஆந்திரா காரன் செக்கை வங்கியில் செலுத்தி திருப்பி வந்தால் நீதிமன்றத்தில் வழக்கு தொடந்தான். இவாகளுக்கு சம்மன் வந்ததது. ஆனால் இவங்க மில்லில் யாருக்கும் பணம் பாக்கி வைத்திருப்பதில்லை. செக்கும் பவுண்ஸ் ஆனதில்லை. அதனால் சம்மனை கீழ்மட்ட கிளர்க்கள் கண்டுக்காமல் விட்டு விட்டனர். கடைசியில் அந்த ஆந்திராகாரன் arrest warrant வாங்கிக் கொண்டு நம்வூர் காவல் நிலையத்தில் காசு கொடுத்து விவரம் வெளியே தெரியாமல் திடிரென்று ஒரு நாள் மதியம் அந்தம்மா மில்லீல் இருந்த வெளியே வரும் போது மப்டியில் இருந்த ஆந்திரா போலீஸ் அவரைப் தடுத்தது
அங்கே இருந்தவர்களுட்ன் ஆந்திரா போலிஸ்க்கும் கைகலப்பு ஆனது. பின்னர் அந்தம்மாவே நான் என் காரில் உடுமலைப்பேட்டை காவல் நிலையத்திற்கு வருகிறேன் என்றதும்தான் ஆந்திரா போலீஸ் அவரை விட்டது. இதற்குள் இந்த விசயம் நம்ம ஊரில் அனைத்து கோடிஸ்வரர்களுக்கும் பரவி அத்தனை பேரும் குட்டை போலீஸ் நிலையத்தில் குவிந்து விட்டனர். நம்ம ஊரில் உள்ள அத்தனை சொகுசு கார்களும் குட்டையில் அன்று பார்ததேன். சுமார் 30 கார்கள். எல்லா வகைகளும். குறைந்தப்பட்சம் sonata தான். Audi மட்டும் தென்படவில்லை. பின்னர் அந்தம்மா சொந்த ஜாமீனில் வெளிவந்தார். அத்தனை பெரிய கோடீஸ்வரர் வெறும் 4 லட்சத்துக்கு அதுவும் கவனக்குறைவால் இந்த சூழ்நிலைக்கு வந்ததுப்பற்றி மற்ற தொழில்அதிபர்களிடம் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூரை நாம் மாவட்ட தலைநகரம் என்று அழைப்பதை விட குற்றத்தலைநகரம் என்று அழைப்பதே சரியாக இருக்கும். அந்த அளவுக்கு நாளுக்கு நாள் கொலை கொள்ளை வழிப்பறி என்று பேப்பரில் செய்தி வந்துக் கொண்டே இருக்கிறது. கோவையில் pricol நிறுவனத்தில் வேலை நீக்கம் செய்யப்பட்ட பத்து தொழிலாளிகள் அலுவலகத்தில் புகுந்து அங்கு இருந்த Senior HR managerai கொன்றுவிட்டார்கள். சமீபத்தில் திருப்பூர்க்கு அருகில் சூதாட்டம் நடந்த இடத்தில 49 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்தார்கள் என்று பேப்பரில் படித்தேன். அருகில் இருந்த நண்பன் சொன்னான். "கணக்கு காட்டினதே 49 லட்சம்னா அப்ப அங்க எவ்வளவு இருந்திருக்கும்?"

தேங்காய்க்கு ஒன்றும் கட்டுபடியாகாத விலை, வறட்சியால் ஒன்றும்பெரிதாக இல்லாத விவசாயம் என்று பல காரணங்களால் இந்த தீபாவளி ஒன்றும் பெரிதாக கலகலக்கவில்லை. பார்ப்போம் இன்னும் சில நாட்கள் இருக்கிறது.

இன்னும் விசயம் இருக்கிறது. ஆனால் டைப் அடிப்பதற்கு பொறுமை இல்லை. சில நாட்களுக்கு பிறகு பொழுதுபோகாத நேரத்தில் மற்றதை டைப் செய்து இங்கே தருகிறேன்