Saturday, May 15, 2010

http://twitter.com/udumalaipettai

பக்கம் பக்கமாகவும் பத்தி பத்தியாகவும் எழுத ஒன்றும் இல்லாததால் Twitter சரியாக இருக்கும் என்று எண்ணுகிறேன்

இனிமேல் இதில் தொடருங்கள்


http://twitter.com/udumalaipettai

Wednesday, April 7, 2010

குறுஞ்செய்திகள்

வெயில் வாட்டி எடுக்கிறது. வந்திருந்த சென்னை நண்பர்கள் சென்னை வெயிலே பரவாயில்லை என்றார்கள். (நான் பார்த்த வரையில் 36.6டிகரி வரை வந்தது)

சின்னார் சாலையில் யானைகள் அட்டகாசம் பண்ணுகிறது. போன வாரம் கலெக்டர் தாசில்தார் காரை மறித்து மறியல் பண்ணியது. (சாயந்திரம் போங்கள் ஒரு பத்து யானைகளையாவது நிச்சயம் பார்க்கலாம்)

கடைகளுக்கு பெயர் பலகை வைக்கிறார்களே இல்லையோ..வேலைக்கு ஆட்கள் தேவைனு போர்டு வைக்கிறார்கள். கிட்டதட்ட நம்ம ஊரில் 80% கடைகளில் போர்டு தொங்குகிறது. பிரபலமான கடை முதற்கொண்டு இன்னும் தொடங்காத கடை வரை இந்த பிரச்சனை இருக்கிறது. எல்லாம் திருப்பூர் சென்னை பெங்களுர் செய்யும் ஜாலம்.

ஒரளவு தண்ணீர் பிரச்சனை வந்து விட்டது. வாசல் தெளிப்பது முதல் பைக் கழுவுவது வரை தண்ணீரை இறைத்து பயன்படுத்தி பழக்கப்பட்ட நம்ம ஊர் மக்கள் மே மாதம் கொஞ்சம் கஷ்டப்படத் தான் போகிறார்கள்.

சில லட்சம் ரூபாய்களில் அமராவதி அணையின் பூங்கா சற்றே மேம்படுத்தப்படுகிறது. உடுமலையில் பயன்படுத்த பூங்கா இல்லாத குறையை 21கிமீ தள்ளியிருக்கும் இந்த பூங்காவாவது நீக்கட்டும்

மின்மயானம் செயல்பட ஆரம்பித்து விட்டது. இனி வாழ்வின் தொடக்கமும் முடிவும் நம்ம ஊரிலேயே சாத்தியம். இது வரை பிறக்க ஒரு ஊர் இறக்க ஒரு ஊர் என்ற கொடுமை தீர்ந்து விட்டது.(இந்துக்களுக்கு மட்டும்)


யோகா தியானம் ஆகியவற்றில் ஆர்வம் நிறைய பேர்களுக்கு நிறைய வந்திருக்கிறது. முக்கியமான தியேட்டர் ரோட்டில் உள்ள முக்கிய டாக்டரே சர்க்கரை நோய் குறைய யோகாவில் சேர்ந்திருக்கிறார்.

நெடுஞ்சாலை துறை அமைச்சர் திண்டுக்கல் - கோவை சாலை 4 வழிப்பாதை ஆக்கப்படும் என்று சில தினங்களுக்கு முன் அறிவித்திருக்கிறார்.

ரயில்வே பால வேலையும் அகல பாதை வேலையும் நடைபெறாமல் அந்தப் பகுதி மக்களை ரொம்பபே இம்சித்து கொண்டுயிருக்கின்றன.

நம்ம ஊரில் பள்ளி கல்லூரி சேர்க்கை காலம் இது

LKGல் பிரபலம் சீனிவாசா
11ஆம் வகுப்புக்கும் சீனிவாசா
கலைக் கல்லூரி என்றால் பொள்ளாச்சியில் அல்லது வெளியூரில் படிக்கவே மாணவர்கள் விரும்புகிறார்கள்.
மாணவிகள் அந்த பெண்கள் மட்டுமே படிக்கும் கல்லூரியை விரும்புவதில்லை. ஆனால் பெற்றோர்கள் விரும்புவதால் நிறைய பேர் அங்கேயே படிக்கிறார்கள்

பொறியியல் கல்லூரி என்றால் குறிப்பிட்டு சொல்ல முடியாதபடி அவரவர் விருப்பங்கள் தேர்ந்தெடுக்கும் பாடங்கள் என மாறுபடுகிறது

Monday, March 22, 2010

உடுமலைச் செய்திகள்

மத்திய பேருந்து நிலையத்திற்கு கிழபுறம் இருக்கும் குடிசைளை சுத்தமாக அப்புறப்படுத்தி அந்த இடம் இரண்டு மாதமாக வெய்யிலில் காய்ந்து கொண்டிருக்கிறது. பேருந்து நிலையம் விரிவாக்கம் செய்யப் போகிறார்கள். (எனக்கு என்னவோ கல்பனா கிரவுண்டை பேருந்து நிலையமாக்கி விடலாம் என்றே தோன்றுகிறது. விளையாடுவதற்கு சிவசக்தி காலணியில் மாரியம்மன் கோயிலுக்கு சொந்தமான 20ஏக்கர் நிலம் இருக்கிறது. அதில் கூட இதைவிட நல்ல மைதானத்தை ஏற்படுத்தி விடலாம். நாலாபக்கமும் சாலைகளை கொண்ட கல்பனா மைதானம் பேருந்து நிலையத்திற்கு நல்ல தேர்வு . உங்கள் கருத்து)

நான்கு வருடங்கள் ஆகும் என்றெ தோன்றுகிறது. நம்ம ஊருக்கு ரெயில் வர. வழக்கம் போல இந்த வருடமும் ரயில்வே பட்ஜெட்டில் நமக்கு அல்வா தான். திண்டுக்கல் முதல் பழனி வரை அகலப்பாதைக்கு நிதி ஒதுக்கியிருக்கிறார்கள். அதாவது அந்தப் பகுதி எல்லாம் திமுக காங் வசம் இருக்கிறது. நம்ம பகுதி எல்லாம் அதிமுக வசம் இருக்கிறது. இனி எதிர்க்கட்சி எம்பி கோரிக்கை வைத்து அதை ஆளும்கட்சி அமைச்சர் கேட்டு நிதி ஒதுக்கி..... விடுங்க அப்துல் கலாம் சொன்னதை செய்து கொண்டே இருப்போம். வேற வழி (கனவு காணுங்கள்!)

சுகுணா பவுல்டரி பற்றி வரும் செய்திகள் ஒன்றும் நல்லதாக இல்லை. நிறைய உற்பத்தி குறைப்பு செய்து இருக்கிறார்கள் என்றும் இந்த வார Junior விகடனின் சுகுணா நிறுவனம் ஏமாற்றி விட்டதாக விவசாயிகள் குற்றம் சாட்டுவதாக கட்டுரை வந்துள்ளது. வரதராஜபுரம் மில்லில் தொழிலாளர்களுடன் பிரச்சனை என்றே எதிர்மறையான செய்திகளே வருகிறது. (யானைக்கும் அடி சறுக்கும்??)

அகலப்பாதைக்கு தான் பிரச்சனை என்றால் ரயில்வே மேம்பாலம் அதவிட கொடுமையாக இருக்கிறது. தண்டவாளம் இருக்கும் இடத்தில் ரயில்வே தான் பாலம் கட்டும் மற்ற இடத்தில் நெடுஞ்சாலை துறை கட்டும். ரயில்வே கட்டும் பகுதி ஒன்பது மீட்டர் உயரத்தில் இருக்கும் என்று கணக்கீட்டு நெடுஞ்சாலை துறை பாலம் கட்ட டெண்டர் விட்டு கிட்டதட்ட ஒரு வருடம் கழித்து வேலையை ஆரம்பிக்கும் நிலையில்...எப்பவுமே தூங்கி வழியும் ரயில்வே கிட்ட தட்ட தனது வேலையை முடித்துவிட்டது. ஆனால் ஒன்பது மீட்டர் உயரம் இருக்கும் என்று கணிக்கப்பட்ட பாலம் 10.5 மீட்டர் இருக்கிறது. இதனால் பாலத்தின் இருபுறமும் அளவுகள் மாறும். செலவுகள் ஏகிறும். இதனால் நெடுஞ்சாலை துறை மறுபடியும் அளந்து டெண்டர் விடுகிறார்கள். அப்பறம் வேலை ஆரம்பித்து...விடுங்க எப்படியாவது முடிச்சுடுவாங்க.....

ஏப்ரல் ஒன்றாம் தேதி தேர். இரண்டாம் தேதி Good Fridayக்காக விடுமுறை. அதனால் வியாழக்கிழமை மட்டும் லீவு போட்டால் சேர்ந்தால் போல் 4 நாள் விடுமுறை. அது போக நம்ம ஊர் தேரையும் பார்க்கலாம். முயற்சி செய்யுங்கள்

குறிப்பாக காரணம் சொல்ல முடியவில்லை என்றாலும் கடந்த 4, 5 வருடங்களாகவே திடீர் பணக்காரர்கள் நம்ம ஊரில் உருவாகிறார்கள். டிவிஎஸில் போய்கொண்டிருக்கும் ஆள் திடிரென்று பைக்கில் போவார். கொஞ்ச நாளில் சொந்த வீடு கொஞ்ச நாளில் நல்ல கார் திடீர் ஆடம்பரம். கேட்டால் தொழிலில் நல்ல காசு என்பார்கள். சுமார் 5 பேரை நானே கவனித்திருக்கிறேன். ஊரில் நிறைய பேரை சுட்டி காட்டுகிறார்கள். சரி கத்திரிக்காய் முத்தினா சந்தைக்கு வந்துதானே ஆகனும். அப்ப தெரிஞ்சுரும் விசயம்

மெகா மோசடி தொழில் அதிபர்கள் இப்போது தொழில் அதிபர்கள். ஆம் பணம் பாதாளம் வரை பாய்ந்தது. பிரச்சனை முடிந்தது.

நம்ம ஊர்காரர் கவுண்டமணிக்கு இதய அறுவை சிகிச்சை நடந்தது. இப்போது நலமாக இருக்கிறார்.(கவுண்டரே அடுத்த ரவுண்டு வாங்க காத்துட்டு இருக்கிறோம்)

இந்த கொங்கு முன்னேற்றப் பேரவை வந்ததும் வந்தது எங்கு பார்த்தாலும் கொங்கு கொங்கு என்று இருக்கிறது. கொங்கு எலக்ரானிக்ஸ் கொங்கு மெஸ் என்று நிறைய நிறுவணங்களின் பெயர் கொங்கில் இருக்கிறது. அது போக நிறைய வண்டிகளின் நம்பர் ப்ளேட்டுகளில் கொங்கு என்று sticker இருக்கிறது. (பேரு வச்சவங்க sticker ஒட்டுனவங்க கூட ஒட்டு போட்டுயிருந்தா Best ராமசாமி burst ராமசாமி ஆகியிருக்க மாட்டாரு). கொ.மு.கயின் செல்வாக்கு அதலபாதாளத்தில் சென்று கொண்டிருக்கிறது. கள் இறக்கும் பிரச்சனையில் மிரட்டலுக்கு பயந்து பின் வாங்கியதால் செல்வாக்கு சரிந்தது. அதே போல தேமுதிகவிலும் செல்வாக்கு சரிந்துள்ளது. இருந்தாலும் தேர்தல் சமயத்தில் காட்சிகள் மாறலாம். பார்ப்போம்

Wednesday, March 17, 2010

ஊரும் சினிமாவும்

நான் கேள்விப்பட்ட வரையில் 'கிழக்கே போகும் ரயில்' தான் நம்ம ஊரில் எடுக்கப்பட்ட முதல் திரைப்படம். அப்பறம் பொள்ளாச்சியில் எடுத்தது போக ஏதோ கொஞ்சம் நம்ம ஊரில் எடுப்பார்கள். முக்கியமாக திருமூர்த்தி மலையில் அல்லது அணையில்

சில வருடங்களுக்கு முன்பு வரை கோவை ஏரியா வின் Shooting hot spotஆக பொள்ளாச்சிக்கு அடுத்த படியாக கோபிசெட்டிபாளையத்தை பின்னுக்கு தள்ளி நம்ம ஊர் இருந்தது. (இப்போது பழைய படி கோபிசெட்டிபாளைத்தில் படப்பிடிப்புகள் நடைபெறுகின்றன). அதற்கு முக்கிய காரணம் சரத்குமார் மற்றும் பாலாப்போன சென்டிமென்டும் தான். ஏதோ ஒரு படத்திற்கு(படப்பெயர் மறந்துவிட்டது) சாலக்குடியில் பாடல் காட்சிக்கு போன சரத்குமார் & டீம் அங்கே மழை பெய்ததால் ஒரு நாலு நாள் மட்டும் உடுமலைப்பேட்டையில் பாடல் காட்சியை எடுக்கலாம் என்று வந்தார்கள். அப்போது தான் ஆனைமலைஸ் ஓட்டல் திறந்த நேரம்.(அதற்கு முன்பு வரை யார் வந்தாலும் பொள்ளாச்சியில் தான் தங்குவார்கள்). சரத்குமாருக்கு ஊரும் ஒட்டலும் ரொம்ப பிடித்து விட்டது. 20 நாட்கள் வரை அந்த படத்தின் படப்பிடிப்பு நீண்டது.

யார் செய்த புண்ணியமோ அந்த படம் வெற்றி பெற்றது. அப்பறம் என்ன அடுத்த சில வருடங்களில் சரத் நடித்த எந்த படமாக இருந்தாலும் அதில் ஒரு காட்சியாகவது உடுமலைப்பேட்டையில் எடுக்கப்படவேண்டும் என்ற நிலை வந்தது. அது போக காதலுக்கு மரியாதை சூர்யவம்சம் போன்ற வெற்றிப்பெற்ற படங்களும் நம்ம ஊரில் எடுக்கப்பட்டது. சென்டிமென்ட் ரொம்ப பார்க்கும் சினிமா துறையில் கேட்கவா வேணும். நிறைய படங்கள் அதற்குப்பிறகு இங்கு எடுத்தார்கள்.

ஆனைமலைஸ் நிர்வாகம் ஒட்டல் நடத்த சற்றே திணறிய போது சரத்குமார் நிறைய உதவி செய்தார். (பிற்பாடு அதை சொந்தமாக வாங்கிவிடலாம் என்ற எண்ணத்தில்). அப்பவே 2 லட்சம் ரூபாய் செலவில் மேல்மாடியில் ஜிம் ஒன்றை ஏற்படுத்தினார். ஒரு குறிப்பிட்ட ரூம் சரத்குமார் தங்குவதற்காகவே ஒதுக்கப்பட்டது. மற்ற நாட்களில் யாருக்கும் அந்த ரூம் தர மாட்டார்கள். அவருக்கு நெருக்கமான ரசிகர் மன்ற நிர்வாகி ஒருவர் கூறினார். நக்மாவும் ஆனைமலைஸ் ஓட்டலும் ஒன்று. பிற்பாடு சொந்தமாக்கி கொள்ளலாம் என்று பணத்தை வாரி இறைத்தார். முடிந்தவரை கறந்துவிட்டு இரண்டும் டாட்டா காட்டி விட்டது என்றார்.(இந்த தகவல் தவறாகவும் இருக்கலாம்).

படப்பிடிப்பால் வாழ்ந்தவர்கள் நிறைய பேர். சில பேர் வீழ்ந்தவர்கள். முக்கியமாக லாட்ஜ்காரர்கள் காட்டில் மழைதான். வந்தால் மொத்த லாட்ஜ்யும் மாதகணக்கில் புக் செய்வார்கள். நல்ல வருமானம் தான். பின்னர் சமையல் பொருட்கள் கோழிகறி ஆட்டுக்கறி என்று நிறைய வாங்குவார்கள். உள்ளூர் பொருளாதாரம் களைகட்டும். ரஜினி நடித்த குசேலனுக்கு பாட்டு சீனில் நடித்தர்களுக்கு சேலை மற்றும் சாப்பாடு போட்டு 300 சம்பளம் மற்றும் அவர்களை மொத்தமாக கூட்டி வருபவர்களுக்கு தனியாக 100 என காசு விளையாடும். டாக்ஸி மற்றும் வேன்களுக்கும் கொண்டாட்டம் தான்.

அதே சமயம் பெரிய தொழிற்சாலைகள் நடத்திவரும் தொழில் அதிபர்களின் மகன்கள் சில பேர் ஊருக்கு எந்த நடிகைகள் வந்தாலும் லட்சங்களை வீசி அவர்களை வீழ்த்துவது வாடிக்கையாகிவிட்டது. அந்த வகையில் இப்போது கோலம் போடும் நடிகைக்கு நல்ல பலன் என்று கேள்விப்பட்டேன். இந்த விசயங்கள் நாலு சுவற்றிக்குள்ளே நடந்தவை. எந்த அளவுக்கு உண்மையிருக்கும் என்று தெரியாது. கேள்விப்பட்டதை அப்படியே தருகிறேன்

சில காட்சிகள் இங்கே எடுத்தாலே படம் வெற்றி என்றால் படம் முழுவதும் இங்கே எடுத்தால் படம் ஆஸ்கார் விருதே வாங்கி விடும் என்று எண்ணி மூவேந்தர் என்ற படம் முக்கால்வாசி நம்ம ஊரிலேயே எடுத்தார்கள். படம் படுதோல்வி. அப்போது பிடித்தது சனி. அதற்கு பிறகும் இங்கே எடுத்த படங்கள் தோல்வி அடைந்ததால் கொஞ்ச கொஞ்சமாக படிப்பிடிப்பு குறைந்த கொண்டே வந்தது.

சமீபகாலமாக சென்டிமென்ட் உல்டாவாகிவிட்டது. உடுமலைப்பேட்டையில் படம் எடுத்தால் அவ்வளவுதான் என்ற நிலைக்கு வந்துவிட்டது. கடந்த பத்தாண்டுகளில் ரஜினி நடித்த படப்பிடிப்பு தமிழ்நாட்டுக்குள் (சென்னை தவிர) நடந்த ஓரே இடம் உடுமலைப்பேட்டை(படம் குசேலன்). பத்தாண்டுகளில் ரஜினி நடித்து ஓடாத ஓரே படம் குசேலன் தான். ரஜினிக்கும் மட்டுமல்ல விஜய்க்கும் தான் வில்லு வேட்டைகாரன் ஆகிய படங்களும் நம்ம ஊரில் எடுக்கபட்டு ஒடாத படங்கள். அது போக துரை மரியாதை கண்டேன் காதலை போன்ற பத்துக்கும் மேற்பட்ட படம் ஓடாதவை.

நம்ம ஊரைச் சேர்ந்த இளைஞர் சக்திவேல் இயக்கிய நகுல் நடித்த கந்தக்கோட்டை ஓரளவு ஒடியது (ஒரு வேளை நம்ம ஊரில் எடுக்காததால் இருக்குமோ).

அதாவது சென்டிமென்ட் பார்தது அவர்களாகவே வரிசை கட்டி வந்தார்கள். சென்டிமென்ட் பார்த்து அவர்களாகவே வராமல் இருக்கிறார்கள். அதற்கு நாமும் நம்ம ஊரும் எந்த விதத்தில் காரணமில்லை.

அரைமணி நேரத்தில் எழுதியது. பிழைகளும் குறைகளும் இருக்கும். மன்னிக்கவும்

Saturday, March 6, 2010

சின்னச் சின்ன செய்திகள்

எழுதி ரொம்ப நாளாச்சு. இரண்டு மூன்று வெளிநாட்டு பயணம்....அப்பறம் டெல்லி conference 24 நாள் மணி நேரமும் ஓயாத வேலை.

அப்படியெல்லாம் ஏதும் இல்லை. உள்ளுரிலேயே தான் குப்பை கொட்டிக் கொண்டுயிருந்தேன். பொதுவாக காலையில்தான் ப்ளாக் எழுதுவேன். கடந்த இரண்டு மாதமாக காலை 6 மணிக்கே மின்சாரம் போய்விடுவதால் எழுதுவதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. (நீ எழுதலைனு யார் அழுதா??)

உடுமலை - பல்லடம் சாலை அகலப்படுத்தும் வேலை மும்முரமாக ஜம்மென்று நடைபெற்று வருகிறது. வேலைகள் எல்லாம் முடிந்து விட்டால் நல்ல கார் இருந்தால் 40 நிமிடத்தில் பல்லடம் சென்றுவிடலாம். அங்கிருந்து திருப்பூர் செல்லவும் 40 நிமிடம் ஆகும். அது வேற விசயம். (contract எடுத்தது அழகிரியின் ஆள் என்று கேள்விப்பட்டேன்

அமராவதி அணையின் நீர்பிடிப்பு பகுதியான பாம்பாற்றில் கேரளா அணை கட்ட முடிவு பண்ணி ஆரம்பகட்ட வேலைகள் நடந்து வருகிறது. இது நம்ம ஏரியாவிற்கு பெருத்த பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறுகிறார்கள் விவசாயிகள். திருப்பூரில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் பெரும்பாலும் மதுரை - நெல்லை ஏரியாவாசிகள் முல்லைப் பெரியார் அணையின் உயரத்தை கேரளா குறைத்ததால் விவசாயம் பாதிக்கப்பட்டு வந்தவர்களே என்றும் பிற்காலத்தில் நம்மூர்காரர்களும் தினமும் 20 30 பஸ்களில் திருப்பூருக்கு வேலைக்கு செல்லும் நிலைவரும் என்று கூறுகிறார்கள். வழக்கம் போல அனைத்து கட்சிகளும் (திமுக காங்கிரஸ் தவிர) தனித்தனியாக போராட்டம் நடத்தினார்கள். அப்பறம் மறந்து விட்டார்கள். பார்ப்போம் என்னதான் நடக்கிறது. (நம்ம அரசியல்வாதிகள் சாலைகள் போட்டு பாலம் கட்டி சம்பாதித்தால் கேரளா அரசியல்வாதிகள் அணை கட்டியே சம்பாதிப்பார்கள் போல)

போக்குவரத்து சிக்னல்கள் பாதி நேரம் நிறுத்தியே வைக்கிறார்கள் காவல்துறையினர். காரணம் டிராபிக் இல்லாத நேரத்தில் நிறுத்தி வைப்பதாகவும் டிராபிக் அதிகமாக இருந்தால் மட்டும் சிக்னல் ஆன் செய்வதாகவும் கூறினார்கள். தினமலரில் பொருளாதாராம் மீண்டும் நல்ல நிலைமைக்கு திரும்பி விட்டதாக படித்தேன். ஒரு வேளை அதனால் மக்கள் எல்லாம் வேலை, பணம் தேடி வெளியிடங்களுக்கு சென்று விட்டார்களோ? (ரூம் போட்டு யோசித்த மாதிரி இருக்குதுங்களா?)




ஒரு வழியாக நமது ஊர் மின்மயானம் இன்று (14-3-2009) திறக்கப்பட்டு விட்டது. இதை கட்ட கிட்டதட்ட மூன்று வருட காலம் ஆகிவிட்டது. எல்லாம் பணம் தான் பிரச்சனை. இதை எழுதும் போதுதான் ஒரு பெரியவர் சொன்ன விசயம் நினைவுக்கு வந்தது. திருப்பூர் சுற்றுவட்டாரம் முழுவதும் விவசாயம் நடைபெற்றுக் கொண்டுயிருக்கும் போதே நம்ம ஊர் நூல் உற்பத்தியில் கொடி கட்டிப் பறந்தது. நம்ம ஊர் மில் முதலாளிகள் அடுத்த கட்டத்தைப் பற்றி யோசிக்காமல் தங்கள் தொழிலையும் சரியாக கவனிக்காமல் இருந்ததால் ஒரு சுடுகாடு கட்ட கூட மூன்று வருடம் போராட வேண்டியிருக்கிறது. திருப்பூரை எடுத்துக் கொண்டால் அங்கே மின் மயானம் கட்டுகிறார்கள். பொது மக்களே பணம் போட்டு பாலம் கட்டுகிறார்கள். சாலைகள் போட்டுக்கொள்கிறார்கள். குறுகிய காலத்தில் மாநகராட்சி மாவட்டம் என்று வளர்ச்சி அடைத்ததுக்கு ஓரே காரணம் தொழில் வளர்ச்சி. இதற்கும் நம்ம ஊரில் மில்கள் எல்லாம் ஆரம்பித்து ரொம்ப நாட்களுக்கு பிறகு தான் அங்கே பனியன் தொழிலே ஆரம்பித்தது. ஆனால் அதை நம்ம ஊர் ஆட்கள் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டதால் நம்ம ஊர் படித்த இளைஞர் ஊர் ஊராக வேலைக்காகவும் தொழிலுக்காகவும் போகும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இப்போ இதை பேசி பிரயோஜனம் இல்லை என்றாலும் இப்படி ஒரு வாய்ப்பு இருந்தும் நழுவ விட்டுவிட்டோம் என்று நினைக்கையில் வேதனை தான் ஏற்படுகிறது.


இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் மாரியம்ம்ன தேர் இந்த வருடம் ஏப்ரல் 1ஆம் தேதி நடைபெறுகிறது. நம்ம ஊரில் உள்ள பிகர்களை எல்லாம் ஓரே இடத்தில் பார்க்க விரும்புபவர்கள் தேர்த்திருவிழா சமயத்தில் குட்டை திடலில் பார்த்து கண்டுகளித்து அம்மனின் அருளுக்கு பாத்திரமாகும்படி கேட்டுகொள்ளபடுகிறார்கள்

முன்னரே சொன்னதுபோல நம்ம ஊரில் வரவர யாரும் வீட்டில சமைப்பது இல்லை என்றே தோன்றுகிறது. ரயில் நிலையம் அருகில் உள்ள சுகுணா அலுவலகத்துக்கு அருகில் அன்னவாசல் மற்றும் பழனி ரோட்டில காந்திராம்ஸ் நிறுவனத்தின் ஒரு அசைவ ஓட்டல் மற்றும் ஐந்தாறு சின்ன சின்ன உணவகங்கள் கடந்த இரண்டு மாதங்களில் திறக்கப்பட்டுள்ளது. பழனி ரோட்டில் நகைகடை போன்ற தோற்றம் உடைய ஏவிஎம் பேக்கிரி ஒன்று திறந்து உள்ளார்கள்.

ஏதேச்சையாக டிசம்பர் 31 இரவு நண்பருடன் பழனி செல்லவேண்டியிருந்தது.(கோயிலுக்கல்ல.அவரின் வியாபார விசயமாக...). திரும்பும் போது இரவு பத்தரை ஆகிவிட்டது. பார்த்தால் முக்கிய வீதியெங்கும் போலீஸ் மட்டும் தான் இருக்கிறது. மக்கள் நடமாட்டமே இல்லை. எப்போதும் இருக்கும் ஜனநடமாட்டம் கூட இல்லை. (கொஞ்சம் அதிகமான பனி தான் காரணம். இந்த வருடம் கொஞ்சம் பனி அதிகம் தான். இப்போது ஓரளவு குறைந்து விட்டது).ஒரு வேளை போலிஸ் எல்லாம் முக்கிய வீதிகளில் புத்தாண்டு கொண்டாடுகிறார்களோ என்று எண்ணிக் கொண்டேன்

லதாங்கி திரையரங்க நிர்வாகம் கணீயூரில் ஒரு தியேட்டரை விலைக்கு வாங்கியுள்ளார்கள்.
சீனிவாசா வீதியில் உள்ள பழைய சரஸ்வதி லாட்ஜ் சுமார் 2 கோடி ரூபாய்க்கு கைமாறியுள்ளது.
ஐஸ்வர்யா நகரில் ஒரு சென்ட் 5 லட்சம் ரூபாய் வரை விலை போயுள்ளது. நம்ம ஊரில் பழைய படி ரியல் எஸ்டேட் விலைகள் ஏறத் தொடங்கியுள்ளது. ஆனால் தோட்டம் வயல் போன்றவற்றிற்கு டிமாண்ட் கொஞ்சம் குறைவு.

வெயில் இப்பவே வாட்டுகிறது. நம்ம ஊரை ஏழைகளில் ஊட்டி என்று ஒரு பேப்பரில் படித்தேன். அப்ப ஊட்டியிலும் 34 டிகிரி வெய்யில் அடிக்கும்ங்களா?

இன்னும் கொஞ்ச நாளில் நம்ம ஊரில் ஆட்டோக்கள் அளவுக்கு மாருதி swift கார்கள் இருக்கும்போல...அந்த அளவுக்கு swift வந்துவிட்டது.

இன்னும் இருக்கிறது. சில தினங்களில் தருகிறேன்


Thursday, November 19, 2009

செய்திகள் சில

* மற்ற இடங்களில் எப்படியோ நம்ம ஊரில் கூடவும் இல்லாமல் குறையவும் இல்லாமல் சரியான அளவு மழை பெய்திருக்கிறது

* மழைக்கு முன் 70 அடி அமராவதி அணையில் 28 அடி தண்ணீர் இருந்தது. 6 நாளில் அணை நிரம்பி இப்போது பார்ப்பதற்கு கண்கொள்ள காட்சியாக இருக்கிறது

* இனி ஒரு 6 மாத காலத்திற்கு விவசாயத்திற்கு தண்ணீர் பிரச்சனை இருக்காது

* ஆனால் திருமூர்த்தி அணையில் கதையே வேறு. இந்த அணைக்கு நீர்ப்பிடிப்பு பகுதிகள் குறைவு. அதனால் மற்ற பகுதி மற்றும் அழியாறு அணையில் இருந்து திறந்துவிடும் தண்ணீர் காண்டூர் கால்வாய் வழியாக வந்தால்தான் அணைக்கு தண்ணீர். காண்டூர் கால்வாயில் ஒரு இடத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் (என்னது நம்ம ஊரிலும் நிலச்சரிவா??) பாறை விழுந்து கால்வாய் ஒரு பக்கம் வாயைப்பிளந்தது. அதனால் திருமூர்த்தி அணைக்கு நீர் வரத்து குறைவு (குறைவு என்ன வரத்தே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்). கால்வாய் சரி செய்ததும் அணை நிரம்ப வாய்ப்பிருக்கிறது.

* மற்றபடி மழையினால் பாதிப்பு என்று சொல்லும்படி ஏதும் நடக்கவில்லை.

* நம்ம ஏரியா விவசாயிகள் உப்பு விக்கப்போனால் மழை பெய்கிறது. மாவு விற்கப் போனால் காத்து அடிக்கிறது என்று புலம்பிக் கொண்டுயிருக்கிறார்கள்.
இதுதான் விசயம். போனதடவை ஊரே மக்காசோளம் நட்டார்கள். நட்டப்பட்டார்கள் (விளைச்சல் அதிகம் விலை குறைவு). உடனே எல்லோரும் ஒன்று கூடி மக்காசோளத்தை விட்டுவிட்டு தக்காளிக்கு மாறினார்கள். மாறவில்லை நஷ்டம் (அதே விளைச்சல் அதிகம் விலை குறைவு). இந்த வருடம் மக்காசோளம் விலை அதிகம். ஆனால் யாரும் நடவில்லை. தக்காளிக்கு காப்பு முடிந்தது. விலையும் அதிகரித்துள்ளது. இனி அனைவரும் ஒன்று கூடி பேசி எதை விதைத்து நஷ்டப்படலாம் என்று முடிவு செய்வார்கள். நம்மாளுகளின் ஒற்றுமை மெய்சிலிர்க்க வைக்கிறது. இந்த தடவை ஒரு பயிரின் விலை குறைந்தால் அதை எல்லாரும் அடுத்த தடவை தொட மாட்டார்கள். இன்னொரு குறை எல்லோரும் சொல்லிவைச்ச மாதிரி ஓரே பயிரைத் தான் நடவு செய்கிறார்கள். அதுவும் ஒரே நேரத்தில். சில அறிவு ஜீவிகள் எதிர்மறையாக செயல்பட்டு ஜாக்பாட் அடிக்கவும் செய்யத்தான் செய்கிறார்கள்.

*கவுண்டமணி ஒரு படத்தில் சொல்வாரே "வர வர இந்த தொழில்அதிபர்கள் தொல்லை தாங்க முடியலப்பா"ன்னு அந்த மாதிரி நம்ம ஊர் வர வர இந்த கார் வைச்சிருக்கவங்க தொல்லை தாங்க முடியல. அனைவருக்கும் கார் தேவை தான.் வைத்துக்கொள்ளலாம். அதற்காக நம்மாளுக பண்ணும் சேட்டை தாங்க முடியல. குண்டூசி என்றாலும் சரி பேனா பென்சில் வாங்க வேண்டுமென்றாலும் காரை எடுத்துக்கொண்டு தளி ரோட்டுக்கு வந்து விடுகிறார்கள். மாலை நேரத்தில் ரோட்டின் கிழக்கு பக்கம் முழுவதும் காராக்தான் இருக்கும்.கார் எடுத்து வருபவர்கள் பெரும்பாலும் நகரத்தில் வசிப்பவாகள் தான். நேற்று எங்கள் கடைக்கு வந்தவர் கார் நிறுத்த வசதியில்லை என்று குறைபட்டு கொண்டார். இதற்கும் அவர் வீடு சார்பதிவாளர் அலுவகத்திற்கு அருகில் இருக்கிறது. (கிட்டதட்ட அவர் வீட்டு மாடியில் இருந்து பார்த்தால் கொஞ்சம் தூரத்தில் எங்கள் கடை தெரியும்)

*பல்லடம் - உடுமலை சாலை விரிவாக்கப்பணிகள் 33 கோடி ரூபாய் செலவில் நடைபெற்றுக் கொண்டுயிருக்கிறது.(கமிஷன் போக மிச்ச பணத்திலையாவது ஒழுங்கா ரோடு போடுங்க சாமி!!!)

* திண்டுக்கல் - கோவை சாலை 4 வழிப்பாதையாகிறது. மடத்துக்குளத்தில் சாலையேட்டி இருக்கும் கட்டிடங்களுக்கு 2010ல் காலிசெய்யச்சொல்லி நோட்டீஸ் கொடுத்து விட்டார்கள். ஆனால் உடுமலை நகரத்தில் ராகல்பாவிக்கு அருகில் இருந்து பைபாஸ் சாலை ஆர்கேஆர் பள்ளி அருகில் சென்று பின்பு பழனி ரோட்டில் ஏதே ஒரு இடத்தில் சேருகிறது. நகரத்தில் பழனி பொள்ளாச்சி சாலையோரம் இருக்கும் கடைகாரர்கள் தப்பித்துவிட்டார்கள்.

* பொள்ளாச்சி மகாலிங்கம் கல்லூரி நிகர்நிலை பல்கலைகழகமாக மாறப்போகிறது. (பொறியியல் கல்லூரி தவிர்த்து). பெயர் "பொள்ளாச்சி பல்கலைகழகம்" (உடுமலைப்பேட்டை செய்தினு பேர் வெச்சுட்டு உனக்கு எதுக்கு பக்கத்து ஊர் செய்தியெல்லாம்???)