Thursday, July 30, 2009

நடந்ததும் நடக்கப்போவதும்

ஊரே அகலமானதாக தோன்றுகிறது. ஆமாம் நம்ம ஊரில் அனைத்து சாலைகளில் உள்ள ஆக்ரமிப்புகள் அகற்றப்பட்டு பளிச் என்று காணப்படுகிறது நம்ம உடுமலைப்பேட்டை. பேருந்து நிலையத்தின் முன் உள்ள பழக்கடைகள், கல்பனா வீதியில் உள்ள கடைகள் உள்ள ஊரில் உள்ள எல்லா ஆக்கிரமிப்புகளும் காலி...(அதெல்லாம் சரி இன்னும் நாள் இப்படி இருக்கும்?. மறுபடியும் வரத்தானே போகுது...)

ரூம் போட்டு உட்காந்து யோசிச்சு பார்த்தாலும் தெரியல....ஏதுக்கு தாஜ் தியேட்டர்க்கு வடக்கே சிக்னல் வைச்சிருக்காங்கனு!

250 கோடி ஏமாற்றிய உடுமலை வாலிபர்கள் கைது - தினமலரில் செவ்வாய்கிழமையன்று வந்த செய்தி. இதைப் பற்றி விபரங்கள் வந்தவுடன் தனியாக ஒரு பதிவு போடுகிறேன். (உடுமலைப்பேட்டைல இருந்தா பெரிசா சொத்து சேக்கமுடியாதுனு யாருப்பா சொன்னது.... நன்றாக திட்டமிட்டு உழைத்தால் கண்டிப்பாக முடியும். இவர்களைப் போல...


நன்றி: தினகரன்

சில சுவாரசியங்கள்
* இவர்கள் மோசடி பண்ணிய பணத்தில் சுமார் 60 உயர்ரக குதிரைகள் வாங்கினார்கள் (சுமார் மதிப்பு 2 கோடி)
* 15 கார்கள் வாங்கியுள்ளார்கள். (அதுவும் கடனுக்குதான்)
* Helicopter வாங்குவதற்கு பேரம் நடந்துள்ளது
* ஏதோ ஒரு நலிந்த வங்கியையும் வாங்குவதற்கு முயற்சி செய்துள்ளனர் (பார்கக செய்தி)
* இதில் புகைப்படத்தில் முன்றாவதாக உள்ள செல்வக்குமார் கல்லூரியில் எனக்கு இரண்டு வருடம் Junior.
* இரண்டு வருடங்களாக இவர்களுடைய வளர்ச்சியை உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த தொழிற்துறையினர் ஒருவித ஆச்சரியத்துடனே பார்த்தனர்.


இனி உடுமலைப்பேட்டையில் ஒவ்வொரு வீதியும் வெப் கேரமா மூலம் கண்காணிக்கப்படுமாம். நகராட்சி தலைவர் பேட்டியில் கூறியுள்ளார்.

சில நாட்களாக நகரில் உள்ள அனைத்து கடைகளும் குறிப்பாக உணவகம் மற்றும் தேநீர் விடுதிகளை கண்டிப்பாக பத்து மணிக்கு முன்பாக மூடவேண்டும் என காவல் துறையினர் உத்திரவு போட்டுயுள்ளனர்.

Wednesday, July 22, 2009

slice of life @ udumalpet

நீங்கள் உள்ளுர்லேயே பிறந்து வளர்ந்து கொஞ்சம் நட்பு வட்டாரங்களுடன் பழக்க வழக்கம் இருந்தால் உங்கள் நடமாட்டம்/நடவடிக்கை ஏதேனும் இரு கண்களால் கண்காணிக்கப்பட்டே தீரும். நம்ம ஊரில் நிறைய பேருக்கு தங்கள் வீட்டின் /கடையின் திண்னையில் உட்காந்து கொண்டே யார் வருகிறார்கள் போகிறார்கள் என்பதை பார்ப்பதே வேலையாக வைத்துக் கொண்டுயிருக்கிறார்கள். அது மட்டுமில்லாது அடுத்தமுறை அவர்களை சந்திக்கும்போது மறக்காமல் அதைப்பற்றியும் கேட்க தவறுவதில்லை. "சிதம்பரம் போன வாரம் சனிக்கிழமை சாயந்திரம் E.Bக்கு வடபுறம்(அது எங்கள் வீடு இருக்கும் ஏரியா) நீங்க பைக்ல போய்ட்டு இருந்தீங்க..நான் எதுக்கால வந்தேன் ஆனா நீங்க பாக்கல என்பதை போன்ற கேள்விகளை நான் நிறைய எதிர்கொண்டுயிருக்கிறேன். நீங்கள் வழக்கமாக உபயோகப்படுத்தும் வண்டியை விட்டு வேறு எதிலாவது நீங்கள் போனால் அதையும் மறக்காமல் இரண்டு வாரம் கழித்து கூட் உங்களை பார்ககும் போது கேட்க மறக்கமாட்டார்கள். இதில் நன்மையும் தீமையும் சேர்ந்தே இருக்கிறது.

எங்கள் அலுவலகத்திற்கு தேவையான மென்பொருளை கோவையில் இருக்கும் ஒரு நிறுவனம் செய்து வந்தது. அதுசம்பந்தமாக மேலும் விபரங்களை சேகரிக்க (Data collection) அந்நிறுவனத்தி்ல் வேலை பார்க்கும் நம்ம ஊரைப் சேர்ந்த என்னுடைய Batchmate பெண் நம்ம அலுவலகத்திற்கு வந்தார். அவரது சொந்த ஊரான குடிமங்கலத்துக்கு போக தன்னை பேருந்து நிலையத்திற்கு பைக்கில் கொண்டு வந்து விடுமாறு அவராக கேட்டுக்கொண்டதால் (நம்புங்கப்பா!!!) அவரைக் கொண்டுபோய் விட்டேன். விட்டுவிட்டு அலுவலகம் வருவதற்குள் 5 கிலோமீட்டர் தள்ளி இருக்கும் கல்லூரியில் வேலை செய்யும் நண்பனிடம் இருந்து போன். "நீ ஒரு பெண்ண கூட்டிட்டு பைக்ல போய்ட்டு இருக்கிறயமா?" என்று கேட்டான். செய்தி 5 நிமிடத்தில் 5 கிமி பறந்துள்ளது. என்னைத் தெரிந்த அவனுக்கு தெரிந்தவர்கள் யாரோ இந்த "பத்த வைச்சுட்டையே பரட்ட" ஸ்டைலில் பத்தவெச்சுட்டார்கள். அது போக ஒரு வாரத்தில் ஆறு ஏழு பேர் நேரடியாகவே கேட்டார்கள். மிகச்சாதாரண விசயத்துக்கு ஒவ்வொருவரிடமும் விளக்கம் சொல்ல சலிப்பாகவே இருந்தது. ரொம்ப நாளாக சேர்த்து வைத்த ஒரு Image கை கொடுத்தது. "அது நான் இல்லை. என்னைப் பற்றி உங்களுக்கு தெரியாதா" என்று திருப்பி கேட்டேன். பார்த்தவர்களுக்கே சந்தேகம் வந்து விட்டது. நமக்கு விளக்கம் சொல்லும் தொல்லை விட்டது.

அதே நேரத்தில் நன்மையும் இருக்கிறது. என் நண்பன் ஒருவன் காரில் விபத்தில் சிக்கிக்கொண்டான். விபத்து நடந்த இடத்தில் இருந்தவர் ஒருவர் ஹதாராபாத்தில் இருக்கும் என் நண்பனை அழைத்து, பெயர் தெரியவில்லை. ஆனால் 9852ல் (நம்ம கார் நம்பர். நண்பர்கள் வட்டத்தில் கொஞ்சம் பிரபலம்!) இவரைப் பார்த்திருக்கிறேன் என்று விபத்தைப் பற்றி கூறினான். திண்டுக்கல்லில் இருந்த என்னை அழைத்த அந்த நண்பன் விசயத்தை கூறினான். நான் வெளியூரில் இருந்ததால் வேறொரு நண்பனை அழைத்த சம்பவயிடத்திற்கு உடனே சென்று பார்க்குமாறு கூறினேன். குட்டைக்கு அருகில் விபத்து நடத்த இடத்திற்கு நண்பன் செல்லும் போது விபத்து நடத்து 5 நிமிடங்களே கடந்துயிருந்தது. இதுமட்டுமில்லாது விபத்தில் சிக்கிய நண்பனின் தந்தைக்கு தெரிந்தவர் தந்தைக்கு தகவல் சொல்ல அவரும் வந்துவிட்டார். The Power of Social Networking!??



சமீபத்தில் உடுமலைப்பேட்டையின் மேற்குப்பகுதியில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த ஒருவரை சந்தித்தேன். நல்ல படிப்பு நல்ல வசதி நல்ல நற்பண்புகள் ஆகியவற்றை கொண்டுள்ளவர். சுமாராக 33 வயது இருக்கும். பேச்சுவாக்கில் அவரது தினசரி நடவடிக்கைகள் பற்றி பேசினோம்.
காலை 7 மணி: தூக்கம் கலைதல்
8 மணி: குளித்து விட்டு காலை உணவு
9 மணி: UKG படிக்கும் மகளுக்கு டாட்டா சொல்லி ஸ்கூல் வேனில் ஏற்றுதல் (நீங்கள் நினைப்பதைப் போல இதெல்லாம் ஒரு வேலையானு கேட்டேன். உங்களுக்கு திருமணமாகி நீங்களும் பள்ளிக்கு அனுப்பும் போது தெரியும் என்று கூறி என் வாய்யை அடைத்துவிட்டார்.)
10 மணி: தினசரிகளை புரட்டி பார்ப்பது
11மணி: ஊருக்குள் இருக்கும் டீக்கடைக்கு சென்று ஒரு திருட்டு தம் மற்றும் டீ
1 மணி: மதியம் சாப்பாடு
2 மணி: குட்டி தூக்கம்
4 மணி: அருகில் இருக்கும் அவரது தோப்புக்கு சென்று மேற்பார்வை
5.30 மணி : வீடு திரும்புதல்
அப்பறம் பள்ளியில் இருந்து திரும்பிய மகளோடு விளையாட்டு, படிப்பு பின்பு கொஞ்சம் டீவி இரவு பத்து மணிக்கு தூக்கம்.... வாரம் ஒரு தடவை டவுனுக்கு வந்து ஒரு சினிமா. அவ்வளவுதான்.

இதற்கும் கோவை PSGல் MBA படித்தவர். சுமாராக மாதம் 2 லட்சம் வருமானம் (செலவு
என் கணிப்பப்படி 30ஆயிரம் இருக்கும் + வருமான வரியென்றால் என்ன என்று கேட்கும் நிலையில் இருக்கிறார். அத்தனையும் tax free). எனக்கு ஆச்சிரியமாக உள்ளது. உங்களுக்கு பொறாமையாக இருக்கிறதா?


ஏர்டெல் postpaid வைத்திருக்கும் நான் சமீபத்தில் அலுவலக உபயோகத்திற்க்காக இன்னொரு இணைப்பு பெற அந்நிறுவனத்தின் ஷோருமிற்க்கு சென்றேன். கூடுதல் இணைப்பைப்(Addon) பற்றி கேட்டதற்கு தற்போது உடுமலைப்பேட்டைக்கு (மற்றும் நமது ஊரைப்போன்ற பல சிறுநகரங்களுக்கும்) Postpaid இணைப்பு வழங்கப்படுவதில்லை என்றும் வேண்டுமென்றால் ப்ரிபெய்டு வாங்கிக்கொள்ளுங்கள் என்று கூறிவிட்டனர். காரணம் யாரும் சரியாக பில் கட்டுவதில்லை என்றும் கூறினார். அதன்படி பார்த்தால் சென்னை கோவை போன்ற நகரங்களில் எல்லாம் ஒழுங்காக பில் கட்டுராங்களா? ஒப்பிட்டு பார்த்தால் பெருநகரங்களைவிட நம்ம ஊர்காரங்க சரியாகத்தான் பில் கட்டுகிறார்கள். ஆனால் இந்த தனியார் நிறுவனங்களுக்கு நம்மைப் போன்ற சிறுநகரங்களை எப்போதும்மே ஒருமாதிரி வேண்டாவெறுப்பாகத்தான் பார்க்கிறார்கள். Credit card Personal Loan போன்றவற்றை எப்போதும் நம்ம ஊர்களுக்கு தருவதே இல்லை... என்ன கொடுமைசார் இது?

Thursday, July 16, 2009

கொஞ்சம் காத குடுங்க...


இப்ப நான் சொல்ல போற விசயம் கொஞ்சம் ரகசியமானது. படிக்கற உங்களுக்கு எனக்கும் தவிர யாருக்கும் தெரியாது. அதனால கொஞ்சம் ரகசியமா வைச்சுக்கோங்க...


1) கொங்கு மண்டலத்தின் செல்வாக்கான அரசியல்வாதி ஒருவர் சமீபத்தில் தனது scorpioவை விட்டு 19 லட்சம் மதிப்புள்ள வேறொரு காருக்கு மாறிவிட்டார். நண்பர் ஒருவர் தனிமையில் அதைப்பற்றி கேட்டபோது "ஆமாங்க சும்மா 50, 100னு பிக்பாக்கெட் அடிக்கரவன் எல்லாம் scorpioல வரான்.


நாமலும் அது வந்தா வித்தியாசம் வேண்டாமா என்று சொல்லியிருக்கிறார். (அதாவது 100ரூபாய் பிக்பாக்கெட் அடிப்பவனுக்கும் கோடி கோடியாய் அடிப்பவனுக்கு வித்தியாசம் வேண்டுமே அதனால் தான் காரை மாற்றிவிட்டார் போல)

2) அவர் உடுமலைப்பேட்டையின் தெற்குபகுதியின் மலையடிவார கிராமத்தின் பெரும் பண்ணைகாரர். சும்மா உட்காந்து சாப்புடாலே ஏழு தலைமுறைக்கும் வரும். அவ்வளவு சொத்துக்கு சொந்தகாரர். கேட்கவாவேணும் லொள்ளுக்கும் குசும்புக்கும்.... . தலைவருக்கு வீட்டில் வளர்க்கும் கோழி ஆடு போன்றவற்றை சாப்பிடவே பிடிக்காது. பின்ன? வனப்பகுதியில் அலைந்து திரியும் மிருகம் ஒன்று தான் அவருக்கு பிடித்த உணவு. அதுவும் அங்கேயே பிடித்து, சமைத்து சாப்பிடுவது தான் பிடிக்கும். என்னுடைய நண்பர் அவருக்கும் நண்பர். ரொம்ப நாளாய் அவரை கூப்பிட்டே இருந்தார். வாங்க பழகலாம் ஸாரி சாப்பிடலாம்னு. ஆமாம் அந்த மிருகத்தை பிடித்தால் 15 பேர் வரை சாப்பிடலாம். அதனால் இந்த மாதிரி நண்பர்களை கூட்டிட்டு தான் போவார் துரை. என்னுடைய நண்பர் ஒரு நாள் காலை அவருடன் வனப்பகுதிக்கு சென்றார். வனப்பகுதியை பாதுகாக்கும் தலைமை அதிகாரி வேறு ரொம்ப கண்டிப்பானவர் என்று அவர் கேள்விப்பட்டுள்ளார். மிருகங்களை வேட்டையாடி சால்மான்கானே தப்பிக்க முடியவில்லை. நாமெல்லாம் எங்கே என்று பயந்தபடியே சென்றார்.

நல்ல உயரமான பாறையில் பயங்கர சிரிப்புடன் பத்து பேர் கொண்ட கும்பல் ஏற்கனவே அங்கே கும்மாளம் அடித்து கொண்டிருந்தது. நண்பர் பயந்து கொண்டே சாப்பிட ஆரம்பித்தார். ஒரு அரைமணி நேரம் கழிந்த பின் யாரோ சிலர் பாறையில் ஏறி வருவது போல சத்தம் கேட்டது. எல்லாரும் சத்தம் வரும் திசையில் பார்த்தனர். இவருக்கு இதயமே நின்று விடும் போலிருந்தது. அங்கே நான்கு காவலர்கள் அதில் ஒருவர் துப்பாக்கியுடன் வந்து கொண்டுயிருந்தார்கள். நண்பர் நல்லா மாட்டிக்கொண்டோம் என்று நினைத்தார். மூன்று காவலர்கள் இருபதடி தூரத்திலேயே நின்று கொண்டார்கள். தூப்பாக்கியுடன் இருந்த காவலர் மட்டும் அருகில் பண்னைக்காரரை நோக்கி வந்தார். நமது நண்பருக்கு வேர்த்து விறுவிறுத்து போனது. காவலர் பண்னைக்காரர் அருகில் வந்து குனிந்து " இன்னைக்கி வீட்டில விருந்தாளிங்க வந்திருக்கிறாங்க அதனால அய்யா கறியை கொஞ்சம் சேர்த்து வாங்கிட்டு வரச் சொன்னார்" என்று அந்த காவலர் கிசுகிசு குரலில் சொல்ல நம்ம நண்பருக்கு அப்போது தான் உயிர் வந்தது. (நல்லா பாக்குறாங்கைய்யா வேலைய....)

3) மாநிலத்தில் மற்ற பகுதியில் எப்படியோ...நம்ம ஊரைப் பொறுத்தவரையில் இரண்டு கழகத்தின் பெரும்புள்ளிகள் ஆற்றின் கரையில் இருப்பதை அள்ளுவதில் கரைதேர்ந்தவர்கள்(ஒற்றுமையாக). இது கடந்த இருபது வருடமாக தொடர்கிறது. அதாவது ஆட்சியில் இருப்பவர்கள் அள்ள, எதிர்கட்சியில் இருப்பவர்கள் கையில் காசு. அதனால் யாரும் வாய் திறக்கமாட்டார்கள். கொஞ்ச நாள் முன்னாடி முரசடித்து கொண்டிருக்கும் நடிகர் கூட்டதின் உள்ளுர் தலைவர் இரண்டு கழகத்தின் தலைவர்களை தொடர்பு கொண்டு என்னையும் 'நமக்கு நாமே' திட்டத்தில் சேர்த்து கொள்ளுமாறு கேட்டார். அதற்கு ஒரு முக்கிய புள்ளி போனிலேயே "சின்னப்புள்ள தனமா இருக்கு. முளைச்சு மூனுஇல விடல அதுக்குள்ள பங்கு கேட்குதா உனக்கு. போய் வேலைப்பாரு" என்று திட்டிவிட்டதாக கேள்விப்பட்டேன்.

படிச்சுட்டு உங்கள் கருத்தையும் சொன்னால் நல்லாயிருக்குங்க....

Wednesday, July 15, 2009

உடுமலை ஒளிர்கிறது - 3 சிக்னல்களால்!!!

ஒரு கிராமத்துப் பழமொழி ஞாபகம் வருகிறது. "அறுக்கமாட்டான் இடுப்புக்கு 57 கத்தியாம்". அந்த மாதிரி சின்ன ஊருக்கு 3 இடங்களில் ஓரே நேரத்தில் சிக்னல்கள் வரப்போகிறது. புதிய பேருந்து நிலைய ரவுண்டனா, தளி ரோடு பொள்ளாச்சி-பழனி ரோடு சந்திப்பில் ஒன்று மற்றும் கன்னிகா பரமேஸ்வரி பள்ளிக்கு எதிரில் ஒன்று என மூன்று சிக்னல்கள் அமையப் போகிறது.

அதென்னமோ இந்த பொள்ளாச்சி பழனி ரோட்டில் தான் எல்லாம் அமைகிறது. ஊரைச் சுற்றி ஆயிரத்தெழு கிராமங்கள் நாலாபுறமும் இருந்தாலும் கொஞ்ச நாள் முன்பு வரை எல்லா பெட்ரோல் பங்க்களும் இந்த பொள்ளாச்சி பழனி ரோட்டில் தான் இருந்தன. ஊரில் எந்த பகுதியில் இருந்தாலும் இங்கு வந்து தான் பெட்ரோல் போட வேண்டும். இப்போது பரவாயில்லை. தளி ரோட்டில் அருகருகே 3 பங்க்குள் துவங்கியிருக்கிறார்கள்.


பத்து நாள் முன்பு இனி ஒரு வாரம் மழை பெய்யவில்லை என்றால் நம்ம ஊருக்கு தண்ணீர் பஞ்சம்(நம்ம ஊரு வரலாற்றில் முதன் முதலாக....) வந்துவிடும் நிலைக்கு வந்துவிட்டது திருமூர்த்தி அணை. யார் செய்த புண்ணியமோ (நான் இல்லீங்க...) சுமாராக மழை வந்து காப்பாற்றி விட்டது. ஆனாலும் இதயம் பலவீனமானவர்கள் யாரும் திருமூர்த்தி மலை பக்கமோ அணைப்பக்கமோ போகாதீங்க. காய்ந்து கிடக்கும் (சில நாட்களுக்கு முன் வரையான நிலைமை) அருவியையும் குளமாகிப் போன அணையையும் பார்க்க தைரியம் வேண்டும்.

கடந்த வார தினமலரில் நம்ம ஊரில் காவல் நிலையத்தில் யாரும் வழக்கே பதிவு செய்வதில்லையென்றும் அனைத்தையும் பேசியே பைசல் செய்யகிறார்கள் கட்டப்பஞ்சாய்த்து நடக்கிறது என்றும் செய்தி வந்தது. அடுத்த நாளே திருப்பூர் மாவட்ட(ஆமாங்க இப்ப நாமெல்லாம் திருப்பூர் மாவட்டம்) எஸ்பி சாந்தி அவர்கள் நேரில் வந்து லெப்ட் ரைட் வாங்கி விட்டார்கள். அரண்டு விட்டனர் நம்ம ஊர் போலிஸ்.

quick update: நான் இந்த பிளாக்ல எழுதன நேரமே என்னவோ திருமூர்த்தி மலை அருவியில் நல்ல வெள்ளம் வருகிறது. பாதுகாப்பு கருதி குளிக்க தடை செய்யப்பட்டுயிருக்கிறது.