Thursday, November 19, 2009

செய்திகள் சில

* மற்ற இடங்களில் எப்படியோ நம்ம ஊரில் கூடவும் இல்லாமல் குறையவும் இல்லாமல் சரியான அளவு மழை பெய்திருக்கிறது

* மழைக்கு முன் 70 அடி அமராவதி அணையில் 28 அடி தண்ணீர் இருந்தது. 6 நாளில் அணை நிரம்பி இப்போது பார்ப்பதற்கு கண்கொள்ள காட்சியாக இருக்கிறது

* இனி ஒரு 6 மாத காலத்திற்கு விவசாயத்திற்கு தண்ணீர் பிரச்சனை இருக்காது

* ஆனால் திருமூர்த்தி அணையில் கதையே வேறு. இந்த அணைக்கு நீர்ப்பிடிப்பு பகுதிகள் குறைவு. அதனால் மற்ற பகுதி மற்றும் அழியாறு அணையில் இருந்து திறந்துவிடும் தண்ணீர் காண்டூர் கால்வாய் வழியாக வந்தால்தான் அணைக்கு தண்ணீர். காண்டூர் கால்வாயில் ஒரு இடத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் (என்னது நம்ம ஊரிலும் நிலச்சரிவா??) பாறை விழுந்து கால்வாய் ஒரு பக்கம் வாயைப்பிளந்தது. அதனால் திருமூர்த்தி அணைக்கு நீர் வரத்து குறைவு (குறைவு என்ன வரத்தே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்). கால்வாய் சரி செய்ததும் அணை நிரம்ப வாய்ப்பிருக்கிறது.

* மற்றபடி மழையினால் பாதிப்பு என்று சொல்லும்படி ஏதும் நடக்கவில்லை.

* நம்ம ஏரியா விவசாயிகள் உப்பு விக்கப்போனால் மழை பெய்கிறது. மாவு விற்கப் போனால் காத்து அடிக்கிறது என்று புலம்பிக் கொண்டுயிருக்கிறார்கள்.
இதுதான் விசயம். போனதடவை ஊரே மக்காசோளம் நட்டார்கள். நட்டப்பட்டார்கள் (விளைச்சல் அதிகம் விலை குறைவு). உடனே எல்லோரும் ஒன்று கூடி மக்காசோளத்தை விட்டுவிட்டு தக்காளிக்கு மாறினார்கள். மாறவில்லை நஷ்டம் (அதே விளைச்சல் அதிகம் விலை குறைவு). இந்த வருடம் மக்காசோளம் விலை அதிகம். ஆனால் யாரும் நடவில்லை. தக்காளிக்கு காப்பு முடிந்தது. விலையும் அதிகரித்துள்ளது. இனி அனைவரும் ஒன்று கூடி பேசி எதை விதைத்து நஷ்டப்படலாம் என்று முடிவு செய்வார்கள். நம்மாளுகளின் ஒற்றுமை மெய்சிலிர்க்க வைக்கிறது. இந்த தடவை ஒரு பயிரின் விலை குறைந்தால் அதை எல்லாரும் அடுத்த தடவை தொட மாட்டார்கள். இன்னொரு குறை எல்லோரும் சொல்லிவைச்ச மாதிரி ஓரே பயிரைத் தான் நடவு செய்கிறார்கள். அதுவும் ஒரே நேரத்தில். சில அறிவு ஜீவிகள் எதிர்மறையாக செயல்பட்டு ஜாக்பாட் அடிக்கவும் செய்யத்தான் செய்கிறார்கள்.

*கவுண்டமணி ஒரு படத்தில் சொல்வாரே "வர வர இந்த தொழில்அதிபர்கள் தொல்லை தாங்க முடியலப்பா"ன்னு அந்த மாதிரி நம்ம ஊர் வர வர இந்த கார் வைச்சிருக்கவங்க தொல்லை தாங்க முடியல. அனைவருக்கும் கார் தேவை தான.் வைத்துக்கொள்ளலாம். அதற்காக நம்மாளுக பண்ணும் சேட்டை தாங்க முடியல. குண்டூசி என்றாலும் சரி பேனா பென்சில் வாங்க வேண்டுமென்றாலும் காரை எடுத்துக்கொண்டு தளி ரோட்டுக்கு வந்து விடுகிறார்கள். மாலை நேரத்தில் ரோட்டின் கிழக்கு பக்கம் முழுவதும் காராக்தான் இருக்கும்.கார் எடுத்து வருபவர்கள் பெரும்பாலும் நகரத்தில் வசிப்பவாகள் தான். நேற்று எங்கள் கடைக்கு வந்தவர் கார் நிறுத்த வசதியில்லை என்று குறைபட்டு கொண்டார். இதற்கும் அவர் வீடு சார்பதிவாளர் அலுவகத்திற்கு அருகில் இருக்கிறது. (கிட்டதட்ட அவர் வீட்டு மாடியில் இருந்து பார்த்தால் கொஞ்சம் தூரத்தில் எங்கள் கடை தெரியும்)

*பல்லடம் - உடுமலை சாலை விரிவாக்கப்பணிகள் 33 கோடி ரூபாய் செலவில் நடைபெற்றுக் கொண்டுயிருக்கிறது.(கமிஷன் போக மிச்ச பணத்திலையாவது ஒழுங்கா ரோடு போடுங்க சாமி!!!)

* திண்டுக்கல் - கோவை சாலை 4 வழிப்பாதையாகிறது. மடத்துக்குளத்தில் சாலையேட்டி இருக்கும் கட்டிடங்களுக்கு 2010ல் காலிசெய்யச்சொல்லி நோட்டீஸ் கொடுத்து விட்டார்கள். ஆனால் உடுமலை நகரத்தில் ராகல்பாவிக்கு அருகில் இருந்து பைபாஸ் சாலை ஆர்கேஆர் பள்ளி அருகில் சென்று பின்பு பழனி ரோட்டில் ஏதே ஒரு இடத்தில் சேருகிறது. நகரத்தில் பழனி பொள்ளாச்சி சாலையோரம் இருக்கும் கடைகாரர்கள் தப்பித்துவிட்டார்கள்.

* பொள்ளாச்சி மகாலிங்கம் கல்லூரி நிகர்நிலை பல்கலைகழகமாக மாறப்போகிறது. (பொறியியல் கல்லூரி தவிர்த்து). பெயர் "பொள்ளாச்சி பல்கலைகழகம்" (உடுமலைப்பேட்டை செய்தினு பேர் வெச்சுட்டு உனக்கு எதுக்கு பக்கத்து ஊர் செய்தியெல்லாம்???)

Wednesday, November 4, 2009

slice of life @ udumalpet - 4

* சில நாட்களுக்கு முன் பள்ளபாளையம் அருகில் உள்ள மானுப்பட்டியில் நடந்த விழாவில் அமைச்சர் இலவச டிவியை மக்களுக்கு வழங்கினார். அதற்கு பதிலாக அவர் இலவச முகமுடிகளை வழங்கியிருக்கலாம். மக்களுக்கு பாதுகாப்பாகாவது இருக்கும். ஆமாங்க அங்க வைச்சு இங்க வைச்சு கடைசியில அடிமடியிலேயே கைவைச்சுட்டான்னு ஒரு பழமொழி மாதிரி அமெரிக்கவுல வந்து இந்தியாவுக்கு வந்து சென்னைக்கு வந்து கோவைக்கு வந்து கடைசியில நம்ம உடுமலைப்பேட்டைக்கும் வந்துவிட்டது பன்றிக் காய்ச்சல். தாராபுரம் ரோட்டில் உள்ள ஆர்.கே.ஆர் பள்ளி மாணவர்கள் 5 பேர்க்கு முதலில் வந்தது. சரியான தடுப்பு நடவடிக்கை எடுக்காததால் இதை எழுதிக் கொண்டுயிருக்கும் வரையில் 15 பேர்க்கு பன்றிக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. மீதி 20 பேரின் டெஸ்ட் ரிசல்ட் வந்தால் தெரியும். தொலைபேசிய நண்பர்களிடம் கெத்தாக நம்ம ஊருக்கேல்லாம் வராது என்று சொல்லிய நான் இப்போது வடிவேலு ஸ்டைலில் "சிங்கத்தை சாச்சுப்புட்டாங்களே" னு கவலையோடு இதை டைப் செய்து கொண்டுயிருக்கிறேன்.

* வாட்டி எடுத்த வறட்சி கொஞ்சம் நீங்கியிருக்கிறது. ஓரளவு சுமாரான மழை பெய்திருக்கிறது நம்ம ஊரில். ஆனால் அமராவதியில் தண்ணீர் இல்லாததால் பாசனத்துக்கு திறந்து விடப்படும் தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது.

* பஞ்சலிங்க அருவியில் நல்லா தண்ணீர் கொட்டுகிறது. இப்போது பாதுகாப்புக்கு கம்பிகள் உடை மாற்ற அறை என்று பல வசதிகள் செய்திருக்கிறார்கள் என்று பேப்பரில் படித்தேன். அடுத்த தடவ ஊருக்கு வரும்போது ஒரு தடவ அங்கேயும் ஒரு விசிட் அடிங்க...

* நீண்ட தூக்கத்தில் இருந்து எழுந்திருக்கிறது நம்ம ஏரியா வனத்துறை. கிட்ட தட்ட ஏழு டன் வெட்டப்பட்டு கடத்துவதற்கு தயாராக இருந்த சந்தன மரங்களை காட்டுக்குள் கைப்பற்றி இருக்கிறது வனத்துறை. அநேகமான இப்போது காட்டுக்குள் வெறும் சந்தன மரத்தின் வேர்கள் மட்டும் தான் பாக்கியிருக்கும் என்று தோன்றுகிறது அந்த அளவுக்கு கடத்தல்காரர்கள் விளையாடியிருக்கிறார்கள்.

விளம்பரம்: இது வரை தமிழ்ப் புத்தகங்களை மட்டும் உடுமலை.காமில் விற்று வந்த நான் சமீபத்தில் குறுந்தகடுகளையும் அதில் சேர்ந்து உள்ளேன். எப்போதும் போல் ஆதரவு தாருங்கள். இந்த நேரத்தில் நம்ம ஊர் வலைப்பதிவர்கள் நாகா(இந்த வார தமிழ்மண நட்சத்திரம்) செந்தில் வேலன் துக்ளக் மகேஷ் ஆகியோர்க்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

ஆதவன் படத்தில் உதயநிதி ஸ்டாலினிடம் நீங்க எந்த ஊர் என்று கேட்கும் காட்சியிருக்கிறதாம். அதற்கு அவர் என் ஊர் உடுமலைப்பேட்டை என்று பதில் சொல்கிறாராம். பார்க்க வேண்டாம் என்று முடிவு செய்த படத்தை இந்த ஒரு காட்சிக்காகவே பார்க்க செல்லும் நேரத்தில் இந்த சிறு பதிவு

நன்றி