Wednesday, August 26, 2009

ஸீன் காட்டி சீட்டிங்!

''ள்ளிக்கூடத்துல படிக்கும்போதே கோடி கோடியா சம்பாதிக்கணும்னு அந்தாளுக்கு வெறி. அந்த வெறி முப்பத்தெட்டு வயசுலேயும் தீப்பொறியா இருந்திருக்கு. திட்டமிட்டு வேலை செஞ்சதால, குறுகிய நாட்கள்ல இருநூற்றைம்பது கோடி ரூபாய் சம்பாதிக்கிற அளவுக்கு உயர்ந்திருக்காரு...'' என்று 'பில்டப்' கொடுத்த போலீஸார், கடைசியில்... ''அந்தாளு இப்போ எங்க கஸ்டடியில!'' என்று சொல்லவும், ''அடடா... விவகாரம் ரொம்ப சுவாரஸ்யமா இருக்கும் போலிருக்கே!'' என்று இந்த கேஸை விசாரித்து வரும் கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் டீம் முன் ஆஜரானோம்.

''சின்ன மீனுன்னு நினைச்சு விசாரணையில இறங்கினோம். கடைசியில அது திமிங்கிலமா இருக்கு...'' என்று ஆச்சர்யம் விலகாமல் கேஸ் பற்றி விரிவாகப் பேசி னார்கள்.

''உடுமலை சுத்துவட்டாரத்துல நலிவடைஞ்சு போன நூல், பேப்பர் மில்லுங்க ஏராளமா இருக்கு. கோடீஸ் வரனா ஆகியே தீரணும்னு கங்கணம் கட்டித் திரிஞ்சுக்கிட்டு இருந்த உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த சீனிவாசன், நலிவடைஞ்ச அந்த மில்களை தானே நடத்துறதாகவும், அதுக்கு ஒரு அமௌண்ட் கொடுத்திடு றேன்னும் சொல்லியிருக்கான். இதை நம்பி, பதினைஞ்சுக்கும் மேற் பட்ட மில்காரங்க, அவன் பொறுப்புல மில்களை ஒப்படைச்சுட்டாங்க.

இந்த மில்லில் உற்பத்தி செஞ்ச பத்து கோடி ரூபாய் மதிப்புள்ள நூலை, இல்லாத ஒரு கம்பெனிக்கு அனுப்பியிருக்குறதா போலி டாக்குமென்ட் தயாரிச்சுருக்கான். அந்த நூலை கம்பெனி பெற்றுக் கொண்டதாகவும், பத்து கோடி ரூபாய்க்கான செக்கையும், உறுதி மொழிப் பத்திரத்தையும் அவங்க அனுப்பியிருக்கிற தாகவும் டாக்குமென்ட் ரெடி பண்ணியிருக்கான். 'பத்து கோடி ரூபாய் என் கம்பெனிக்கு வர வேண்டி இருக்குது. இந்த டாக்குமென்ட்டை வச்சுக்கிட்டு, அந்த கம்பெனி கிட்ட இருந்து பணத்தை வசூல் பண்ணிக்கங்க. எனக்கு அமௌண்டைக் கொடுத்திடுங்க'ன்னு வங்கி அதிகாரிகள்கிட்டச் சொல்லி கோடிக்கணக்கான பணம் வாங்கியிருக்கான். இதைப் போல ஏராளமான போலி கம்பெனிகளை காட்டி இருநூற்றைம்பது கோடி ரூபாய் வரை பணம் சம்பாதிச்சுருக்கான். இந்த தகவல் ஒரிஜினல் மில் நிர்வாகிகளுக்குத் தெரிஞ்சதும், அவங்க பதறிக்கிட்டு எங்ககிட்ட வந்தாங்க.

சீனிவாசன் வாங்கியிருக்குற சொத்து, பேங்குல இருந்து எத்தனை கோடிக்குப் பணப்பரிவர்த்தனை நடந்திருக்குங்குற தகவலை எல்லாம் ஒரு மாசமா சேகரிச்சோம். இந்தத் தகவல் எங்களையே கிறுகிறுக்க வைத்தது. சீனிவாசனுக்கு குதிரைன்னா ரொம்பப் புடிக்கும். அதனால வட இந்தியாவுல இருந்து இருநூறு குதிரை வாங்கியிருக்கான். ஒரு குதிரையோட ரேட் குறைஞ்சபட்சம் ஏழு லட்சம் ரூபாய். வீட்டுல இருந்து அடுத்த மாநிலங்களுக்கு ஹெலிகாப்டர்ல போறதுக்கு ஆசைப்பட்ட சீனிவாசன், சில ஹெலிகாப்டர் கம்பெனிகள்ல கொட்டேஷன் வாங்கியிருக்கான். அது தொடர்பான டாக்குமென்ட்டை கைப்பத்தியிருக்கோம். 'அயன்,' 'படிக்காதவன்' படங்களோட கோவை மாவட்ட விநியோகஸ்தராகவும் இருந்தி ருக்கான். சமீபத்துல தாய்லாந்து போயிட்டு ஒரே நாள்ல நாற்பது லட்சம் ரூபாய் செலவு செஞ்சுருக்கான்.

சீனிவாசன்கிட்ட கோடிக்கணக்குல ஏமாந்து போயிருக்குறது மத்திய அரசு கன்ட்ரோல்ல இருக்குற ஒரு பேங்க்தான். அது போல, இவ்ளோ பெரிய நஷ்டத்தை அந்த கம்பெனி எதிர்பார்க்கல. அந்த கம்பெனியில இருந்து முக்கிய அதிகாரி ஒருத்தரு ராஜினாமா செஞ்சுருக்காரு. இன்னும் பல அதிகாரிகளுக்குத் தொடர்பு இருக் கும்னு நினைக்கிறோம்...'' என்று சொன்னார்கள். போலீஸார் தேடுவதை அறிந்ததும் கோர்ட்டில் சரணடைந்து விட்டார் சீனிவாசன். அவர் வளர்த்து வந்த குதிரைகளும் அவருடைய ஆட்களால் கேரளாவுக்கு 'ஷிப்ட்' செய்யப் பட்டு விட்டது. சீனிவாசனுக்கு மோசடியில் துணையாக இருந்த வெங்கடாசலபதி, செல்வக்குமார் ஆகியோரும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

'இத்தனை கோல்மால்களையும் அரசியல் தொடர்பு இல்லாமல் சீனிவாசன் செய்திருக்க முடியுமா?' என்ற சந்தேகமும் போலீஸார் மத்தியில் ஏற்பட்டிருக்க... அது தொடர்பாகவும் விசாரித்து வருகிறார்கள்.

விசாரணைக்காக கோர்ட்டில் ஆஜர்படுத்த வந்த போது சீனிவாசனிடம் பேசினோம். ''என்னைப் பத்தி என்ன வேணும்னாலும் எழுதிக்கங்க. இந்த வழக்குல இருந்து நான் நிச்சயம் வெளியில வருவேன். வந்த பிறகு நடந்த உண்மைகளை எல்லாம் சொல்வேன்...'' என்று அசராமல் சொன்னார்.

வாழ்க்கையில்... தான் கொண்ட 'கோடி' லட்சியத்தை அடைந்துவிட்ட சீனிவாசன், சென்ற பாதையில் மட்டும் தவறி விட்டார்!

Junior விகடனில் வந்த கட்டுரை: நன்றி: Junior விகடன்

2 comments:

ஜெயச்சந்திரன் said...

இஸ்..... அப்பா.. இப்போவே கண்ண கட்டுதே.....

Mahesh said...

சீனிவாசனா "ஸீன்"வாசனா?